Thursday 2 May 2019

காவல் துறையினரின் மக்கள் சாசனம்!

காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் உள்ள கடமைகள் என்ன ?

தமிழ்நாடு காவல்துறை
மக்கள் சாசனம்
LAACO/04.05.2019

1.காவல் துறையினர் தம் அடிப்படை கடமைகளான குற்ற நிகழ்வுகளை தடுத்து பொது அமைதி ஒழுங்கை பாதுகாத்தால் தான் பொதுமக்கள் தங்கள் பணிகளை அமைதியான முறையில் செய்ய இயலும் .

காவல் துறையினர் பின்வரும் கடமைகளையும் செயல்களையும் புரிய கடமைப்பட்டவர்கள் .

(அ) பொது ஒழுங்கை பராமரித்து அதனை பாதுகாத்தல் .

(ஆ) குற்றங்களை புலன் விசாரணை செய்தும் குற்றவாளிகளை கைது செய்தும் பின்னர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றல்.

(இ) குற்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ள சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் கண்டறிதல் .

(ஈ) முன்னெச்சரிக்கையாக ரோந்து சென்றும் தங்கள் இதர நடவடிக்கைகள் மூலமும் குற்றம் நடை பெறுவதற்கான வாய்ப்பு களை குறைத்தல்.

(உ) குற்றங்கள் நிகழ்வதை  தடுப்பதில் ஈடுபட்டுள்ள மற்ற அமைப்புகளுக்கு தக்க உதவிகள்
செய்து ஒத்துழைப்பு அளித்தல் .

(ஊ) தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்கிற நிலையில் உள்ள தனி நபர்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.

(எ) சமூகத்தில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி அதனை பேணுதல்.

(ஏ) மக்களும் வாகனங்களும் சரியான முறையில் இயங்க உதவுதல் .

(ஐ) சச்சரவுகளை தீர்த்து அமைதி நிலவச் செய்தல்

(ஒ) இன்னல்கள் ஏற்படும் காலங்களில் நிவாரணப் பணியில் ஈடுபடுதல் .
நிவாரணங்கள் பெற்றுத் தருதல்

(ஓ) பொது அமைதி ,சமூகம் பொருளாதாரக் குற்றங்கள் ,தேசப்பாதுகாப்பு ஒற்றுமை ஆகியவற்றை சீர் குலைத்தல் குறித்த முன் தகவல்களை சேகரித்தல்

(ஔ) சட்டத்தில் விதிக்கப்பட்ட மற்ற பணிகளை செய்தல் .

2. பொதுமக்கள் குற்றம் நிகழ்ந்து இருந்தாலும் அல்லது குற்றம் நடை பெறக் கூடும் என்ற அச்சம் இருந்தாலும் அதைப்பற்றி காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம் .

காவல் துறையினர் அவர்களை கனிவுடன் நடத்தி குற்றம் நடை பெற்றிருந்தால் வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர் ) நகல்களை  அளிக்க வேண்டும் .

குற்றம் தமது எல்லைக்குள் நடவாது இருப்பினும் காவல் நிலையத்தில் புகாரை பெற்று பதிவு செய்து தொடர் நடவடிக்கை பற்றிய விவரத்தை புகார் கொடுத்தவருக்கு தெரிவிக்க வேண்டும் .

வழக்கின் தன்மையையும் வழக்கின் முன்னேற்றத்தையும் அறிய வழக்கை விசாரிக்கும் எந்த அதிகாரியை அணுக வேண்டும் என்ற விவரத்தையும் புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் .

3 திருட்டுப்போன சொத்து கண்டு பிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தின் மூலம் அச்சொத்தை விரைவில் அதன் சொந்தக்காரருக்கு திரும்பத் தர ஏற்பாடு செய்ய வேண்டும்.

தாமதம் ஏதும் ஏற்பட்டால் அதற்கான காரணம் , எப்பொழுது அவரது சொத்தை திருப்பி அளிக்க இயலும் என்பதை பாதிக்கப்பட்டவருக்கு விளக்க வேண்டும்.

மக்கள் விரும்பினால் பிற்காலத்தில் குற்றங்கள் நிகழா வண்ணம் தடுக்க காவல் துறையினரை அணுகி அதற்கான அறிவுரைகளை பெறலாம் .

காவல் துறையினர் அத்தகையோருக்கு தக்க  உதவி அளிக்கவேண்டும்.

காவல் துறையினர் ஒவ்வொரு பகுதியிலும் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பணியில் பொதுமக்களை ஈடுபடுத்தியும் பாதுகாப்பு அளிக்கும் பணியில் மக்கள் பங்காற்றவும் வழிவகை செய்ய வேண்டும்.

4. வன் குற்றங்களான வழிப்பறி , கூட்டுக் கொள்ளை, சங்கிலி பறிப்பு தனி நபர் தாக்கப்படுதல் ,
பாதிக்கப்பட்டவருக்கு காவல் துறையினர் உடனடியாக மருத்துவ உதவி அளிக்க ஏற்பாடு செய்து அவரது துன்பத்தை குறைக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .

காவல் துறையினர் பாதிக்கப்பட்டவரை விசாரித்து அவர் யாரால் தாக்கப்பட்டார் என்பதை அறிந்து உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்

5 போக்குவரத்து குற்றம்:

சென்னை, மதுரை ,கோயம்புத்தூர் திருச்சி ஆகிய நகரங்களில் போக்குவரத்து விதிகள் மீறல் சம்பவங்களில் காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே அபராதம் வசூல் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர்.

அபராதம் வசூல் செய்ததற்கு  ரசீது கொடுக்கப்பட வேண்டும் .

வாகன விபத்துக்களில் காவல் துறையினர் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் பட்டவரை மருத்துவ உதவி பெற மருத்துவமனைக்கு உடனே அனுப்பியும் விபத்து நடந்த  அந்த இடத்திற்கான வரைப்படம் வரைந்தும் இவற்றில் சம்பந்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

வெகு விரைவில் முதல் தகவல் அறிக்கை மற்றும் இதர ஆவணங்களை வாகன விபத்து நிவாரண தீர்ப்பாயத்திற்கு அனுப்ப
வேண்டும் .

வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர் அரசு நிவாரணம் பெற உரிமை உள்ளவர் ஆவார்.

எனவே காவல் துறையினர் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கிடைக்க உதவி புரிய வேண்டும்.

6. மகளிருக்கு எதிரான குற்றம் ;

மாவட்டங்களிலும் பெருநகரங்களிலும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

காவல் நிலையங்களில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக புகார் அளிக்கலாம் .

மகளிருக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களான தாக்கப்படுதல் ,இளம் பெண்களை கேலி செய்தல் ,மானபங்கம் கற்பழிப்பு, வரதட்சணை கொடுமை போன்ற நிகழ்வுகளில் காவல் துறையினர் மனித நேயத்தோடு அணுகி தக்க முறையில் விசாரணை செய்ய வேண்டும் .

7.திருமணமான ஒரு பெண் திருமணமான ஏழு வருடங்களுக்குள் இறந்திருந்தால் வரதட்சனை இறப்பு என கருதி வருவாய் கோட்டாட்சியரால் விசாரணையும் காவல் துணை கண்காணிப்பாளர் பதவியில் உள்ள ஒருவரால் புலன் விசாரணையும்  செய்யப்பட வேண்டும்

பிண பரிசோதனை இரு மருத்துவ அலுவலர்களால் செய்யப்பட வேண்டும்

8.நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றம் :

குடியுரிமை பாதுகாப்பு சட்டம் தாழ்த்தப்பட்டோர்  மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவை சம்பந்தப்பட்ட புகார்கள் மிக முக்கியமானவையாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

இம்மாதிரி குற்றங்களில் பாதிக்கப் பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நிவாரணம் பெற தகுதியுடையவர் ஆவார் .

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுத் தருவதில் காவல் துறையினர் அதிகபட்ச உதவி செய்வதுடன் நடுநிலையாக இருந்து நியாயமான முறையில் நடவடிக்கை எடுத்து பொது அமைதியை நிலை நாட்ட வேண்டும்

9.பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் சிறப்பு குற்றங்கள் :

ஏமாற்றுதல், பணத்தை கையாடல் செய்தல், நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றங்களை விசாரிக்க தலைமையிடம் மற்றும் மாவட்டங்களில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்சொன்ன இடங்களிலும் இது சம்பந்தமான புகாரை கொடுக்கலாம் .

காவல் துறையினர் வழக்கை விசாரித்து பாதிக்கப்பட்டவருக்கு அவர் கேட்கும் போது வழக்கில் முன்னேற்றத்தை பற்றி தெரிவிப்பர்.

10.போதைப் பொருள் கடத்தல் ,வீடியோ திருட்டு தயாரிப்பாளரின் பதிப்பு உரிமை சட்ட மீறல் போன்ற குற்றங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத்துறை போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் வீடியோ திருட்டுத் தடுப்புப் பிரிவு ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன .

குற்றங்கள் தொடர்பாக மேற்சொன்ன  பிரிவுகளில் புகார் மனு அளிக்கலாம்

11 தபால் மூலம் புகார் அளித்தல் ;

பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரை நேரடியாகவும் அணுகலாம்.

மற்றும் தபால் மின்னஞ்சல் மூலமாகவும் புகார் கொடுக்கலாம்

காவல் துறையினரின் நடவடிக்கையில் அதிருப்தி ஏற்பட்டால் அவர்கள் துறையின் மேல்நிலை அலுவலர்களையோ அரசையோ அணுகி புகார் கொடுக்கலாம் .

12 கைது :

ஒருவர் கைது செய்யப்பட்டால் அவருக்கு அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை தெரிவித்து அவரை ஜாமீனில் வெளியில் விடவும் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற பாதுகாப்பிற்கு அனுப்ப ஏற்பாடு செய்வது காவல் துறையின் கடமை ஆகும் .

மருத்துவர் சோதனைக்கு வசதி செய்தல் தன் நண்பரையோ உறவினரையோ தொடர்பு கொள்ளுதல் தனக்கு ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொள்ளுதல் மற்றும் தன்னை கைது செய்த காவல் துறை அலுவலர் பெயரையும் பதவியையும் அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு உரிமை உண்டு .

கைது செய்யப்பட்ட நேரத்தை குறிப்பிட்டு ஒரு குறிப்பாணையினை தயார் செய்து அதனை காவல் துறையினர் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் .

மேலும் இது பற்றிய விபரத்தினை காவல் கட்டுப்பாட்டு அறையில் வைக்க வேண்டும்

13.பெண் சாட்சிகள் ;

அவர்களுடைய இருப்பிடங்களிலேயே விசாரிக்கப்படுவர் .
பெண்கள் கைது செய்யப்பட்டால் வெகு விரைவில் வழக்கின் தன்மையைப் பொறுத்து ஜாமீனில் விடப்படுவர்.

14 முறைப்படுத்தும் பணிகள் ;

காவல் சட்டத்தில் கூறியுள்ளபடி பொது அமைதியை நிலைநாட்ட வேண்டி ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்த அனுமதி கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது காவல் துறையினர் வெகு விரைவில் அனுமதி அளித்தோ அல்லது மறுத்தோ முடிவு செய்வர் .

இதில் ஏதேனும் குறை இருந்தால் உயர் அலுவலரது கவனத்திற்கு கொண்டு செல்லலாம் .

15 கடவுச்சீட்டு (பாஸ்போர்ட் ) வேலை வாய்ப்பு :

போன்றவற்றை சரிபார்க்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர் மனு வரப்பெற்ற நாளிலிருந்து 15 தினங்களுக்குள் காவல் விசாரணை செய்து அறிக்கை தர வேண்டும் .

16 பொது மக்களின் கடமைகள்:

தனக்குள்ளது போலவே கடமைகளும் உரிமைகளும் மற்றவருக்கும் உள்ளன என்பதை உணர வேண்டும் .

பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல்  குற்ற நிகழ்வு ஆகியவற்றை பற்றி முன்னரே அறிந்தவர் அதைப் பற்றி உடனே காவல் துறையிடம் தெரிவித்தல் அக்குடிமகனின் தலையாய பொறுப்பு ஆகும் .

குற்ற நிகழ்வுகளை தடுக்க அவர் எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் .
அவருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் .

காவல் துறையினர் அவர்களது கடமைகளை நிறைவேற்றும் பணியில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் .
தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடலாம்

வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவரை உடனே மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு விபத்து பற்றி காவல் துறையிடம் தெரிவிக்க வேண்டும் .

விசாரணையில் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு புலன் விசாரணையில் காவல் துறையினருக்கு உதவி செய்தும் நீதிமன்றத்திலும் சாட்சியம் அளிக்க வேண்டும்.
தேவை ஏற்படின் அவர்களுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கும் .

குற்ற நிகழ்வுகளை தடுத்தல் தாம் வசிக்கும் இடத்தில் பொருட்கள் திருட்டு போகா வண்ணம் தக்க பாதுகாப்பு செய்து கொள்ளுதல் சுற்றுப்புற பகுதிகளை கண்காணித்தல் ஆகியவை ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் . Laaco

புதியவர்கள் சந்தேகப்படும் முறையில் நடந்து கொள்பவர்கள் ஆகியோர் பற்றி காவல் துறையினருக்கு தக்க நடவடிக்கை எடுக்க உரிய நேரத்தில் தகவல் தருதலும் ஒரு குடிமகனின் கடமையாகும் .Nanjil

மக்கள் சாசனம் காவல் துறையினரால் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தடுக்கப்படும்.

பெரும்பாலான காவல் நிலையங்களில் கடமை தவறிய காவலூழியர்களினால் காவல் துறையின் "மக்கள் சாசனம்" மதிக்கப்படுவதில்லை !

பல காவல் நிலையங்கள்  கட்ட பஞ்சாயத்து நிலையங்களாக மாறி விட்டது.

புகார் தாரர்கள் அலைகழிக்கப் படுகின்றனர்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

இது மனித உரிமைகள் மீறிய செயலாகும்.

சட்டங்களும் ,விதிகளும் ,சாசனங்களும் ஏட்டளவிலே இருக்கின்றன.

இதனை கண்காணிக்க தவறிய காவல் உயர் காவலூழியர்களும்  இவர்களை பணியில் சேர்ந்த ஆட்சியாளர்களும் கேடு கெட்ட மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்த பொது மக்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர்-641 652
உலா பேசி;98655 90723
மின்னஞ்சல்: nanjillaacot@gmail.com

No comments:

Post a Comment