Thursday 20 June 2019

RTE முக்கிய அரசாணை :9

RTE  முக்கிய அரசாணை!
LAACO /2019

அரசாணை (நிலை) எண் : 9
சுருக்கம்

பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009
இன கீழ் பிரிவு 12 (1) ( C ) மற்றும் பிரிவு 13 ( 1) ஐ மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துதல் - சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும் மற்றும் இயக்குநர்களுக்கும் அனுமதி வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது.
Laaco

பள்ளிக்கல்வித்(சி2) துறை

அரசாணை (நிலை) எண்: 9

நாள் :18.01.2011
(திருவள்ளுவர் ஆண்டு 2042 தை 4)

படிக்கப்பட்டவை :

1.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடித எண் :1 - 15 /10-EE4
நாள்: 23.11.2010

2 ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் கடித ந.க.எண் :9437/ஈ3./2010
நாள் :20.12.2010 

ஆணை:-

     குழந்தைகளுக்கான தொடக்க கல்வியும் அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக கருதப்பட ஏதுவாக  இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு தகுந்த திருத்தம் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனையொட்டி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 மைய அரசால் இயற்றப்பட்டு இச்சட்டம்
01.04.2010 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச தொடக்கக் கல்வி வழங்குவதே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இச்சட்டத்தின் கீழ் மாநில அரசுகள் தகுந்த விதிகளை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2 குழந்தைகளின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 இல் பிரிவு 13  (1) இல் எந்த ஒரு பள்ளியும் குழந்தையை சேர்க்கும் போது எந்த ஒரு பரிசீலனை நடைமுறைக்கும் உட்படுத்தக் கூடாது என்றும் மாணவர் சேர்க்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறையை தெளிவாகக் கூறியுள்ளது என்றும் முதல் வகுப்பிலோ அல்லது ஒரு பள்ளி பள்ளிக்கு முந்தைய கல்வியை (Kinder Garden) வழங்குமானால் அந்த வகுப்பில் சேரும் மொத்த குழந்தைகளில் குறைந்தது 25 விழுக்காடு குழந்தைகளை அருகாமை பகுதியிலுள்ள  நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவுகளை சார்ந்தவர்களாக சேர்த்து அவர்களுக்கு தொடக்கக்கல்வி முடியும் வரையில் இலவச கட்டாய தொடக்க கல்வி வழங்க வேண்டும் என்று பிரிவு 12 (1) (C) இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மேற்கண்ட இரண்டு பிரிவுகளில் குறிப்பிட்டவைகளை செயல் படுத்துவது தொடர்பாக புதுடெல்லி மனிதவள மேம்பாட்டு துறை இயக்குநரிடமிருந்து கீழ்க்கண்ட வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளன.

அ. முதல் வகுப்பிலோ அல்லது ஒரு பள்ளி பள்ளிக்கு முந்தைய கல்வியை ( Kinder Garden) வழங்குமானால் அந்த வகுப்பில் சேரும் மொத்த மாணவர்களில் குறைந்தது 25 விழுக்காடு இடங்களை அருகாமை பகுதியிலுள்ள  நலிந்த பிரிவுகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவுகளை சேர்ந்த குழந்தைகளுக்கு வழங்குதல் வேண்டும்.
அவ்வாறு சேர்க்கும் போது அவர்களுக்கு தேர்வுகள் நடத்துவதோ (Test) அல்லது வாய்வழி வினாக்கள் (Inter view) கேட்பதோ கூடாது.

விண்ணப்பங்களை பெற்று Randam Selection   முறையில் 25 விழுக்காடு மாணவர்களை தெரிவு செய்தல் வேண்டும்.

ஆ. எஞ்சியுள்ள 75 விழுக்காடு இடங்களை பூர்த்தி செய்யும் போது ஒவ்வொரு பள்ளியும் பள்ளி சேர்க் கைக்கான சரியான அடிப்படை கோட்பாடுகளுடன்  ( Rational) கூடிய வரையறுக்கப்பட்ட கொள்கையை ( Policy) பின்பற்றுதல் வேண்டும்.

எந்த ஒரு சமயத்திலும் குழந்தையினுடைய இதர தகுதிகளையோ  (profiles) பெற்றோருடைய கல்வி தகுதியையோ கருத்தில் கொள்ளக்கூடாது.

சேர்க்கைக்கான கொள்கையை பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிகள் பள்ளி கையேடுகளில் (prospectus) தெரியப்படுத்துதல் வேண்டும்.

மேற்கண்ட 25 விழுக்காடு சேர்க்கை மற்றும் 75 விழுக்காடு சேர்க்கை என்ற இரண்டு சேர்க்கையின் போதும் முதல் வகுப்பிலோ அல்லது ஒரு பள்ளி பள்ளிக்கு முந்தைய கல்வியை (Kinder Garden) வழங்குமானால் அந்த வகுப்பில் சேரும் மாணவர்கள் சேர்க்கையின் போது அவர்களிடம் தேர்வுகள் நடத்துவது (Test) வாய்மொழியாக வினாக்கள் கேட்பது (Inter view) போன்ற எந்த ஒரு பரிசீலினை நடைமுறைக்கும் மாணவர்களை உட்படுத்தக் கூடாது.

4. மனித வள மேம்பாட்டுத்துறை இயக்குநரிடமிருந்து பெறப்பட்டுள்ள மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்துவது தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக இதனை தெரியப்படுத்திடவும் பள்ளி நிர்வாகங்கள் இதனை கடை பிடிக்கின்றார்களா என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும் இயக்குநர்களுக்கும் வழங்க அனுமதி வழங்குமாறு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

5 ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து அதனை ஏற்று குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 இல் பிரிவு 12 ( 1) (C) மற்றும் பிரிவு 13 (1) தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறை இயக்குநர் மேலே பத்தி மூன்றில் பெறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை செயல் படுத்துவது தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிய படுத்தவும் பள்ளி நிர்வாகங்கள் இதனை  கடைப்பிடிக்கின்றார்களா என்பதை உறுதி செய்யும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும் மற்றும் இயக்குநர்களுக்கும் வழங்கலாம் என முடிவு செய்து அவ்வாறு அரசு ஆணையிடுகிறது.

     (ஆளுநரின் ஆணைப்படி)

தேவ. ஜோதி ஜெகராஜன்
அரசு செயலாளர்

பெறுநர்:

மாநில திட்ட இயக்குநர்
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சென்னை - 6

பள்ளிக் கல்வி இயக்குநர் சென்னை- 6

தொடக்க கல்வி இயக்குநர் சென்னை - 6

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர்
சென்னை- 6

மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் சென்னை- 6

அரசுத் தேர்வுகள் இயக்குநர் சென்னை - 6 

நகல் :-
மாண்புமிகு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை - 9

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் சென்னை - 9 .

நிதி (கல்வி 11) துறை சென்னை- 9

//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//

பிரிவு அலுவலர்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாப்பேசி :  98655 90723
மின்னஞ்சல் :
nanjillaacot@gmail.com

No comments:

Post a Comment