Sunday 6 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0034 பொது வேலை நிறுத்தம்! முழு அடைப்பு!!


ஊழல் ஒழிப்பு முக்கிய செய்தி :LAACO ;034/2019; நாள் :07.01.2019

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தம் முழு அடைப்பு ஏன்? எதற்காக?

குற்றம் நடக்க இருப்பது என்ன?

தொழிலாளி வர்க்கத்தின் போர்க்களம்!

இரண்டு நாட்கள் தொடர் பொது வேலை நிறுத்தம்!

முழு கடையடைப்பு போராட்டம்!
தனியார் பேருந்துகள் வாகனங்கள் ஓடாது!
இரயில் மறியல்!
பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
பொது சொத்துக்கள் சேதம்!
பொது மக்கள் சொத்துக்கள் சேதம்!

அய்யகோ! 
என்ன சொல்றீங்க? 
ஆம்.

2019 ஜனவரி 8, மற்றும் 9 ஆகிய இரு  தேதிகளில் நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம்!
முழு அடைப்பு போராட்டம்!!

அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!!

போராட்டத்திற்கான காரணம் என்ன?

1..மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பி.ஜே.பி. யின் 4 1/2 ஆண்டு கால ஆட்சியால் தொழிலாளர் மக்கள் உள்ளிட்ட தேசத்தின் நலன்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை கண்டித்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அனைத்து சங்கங்களின் சார்பில் போராட்டமாம்!!

2.இதற்கு காரணமான பி.ஜே.பி. மோடி அரசை தூக்கி எறிய தொழிலாளி வர்க்கம் போர்க்களம் மேற்கொண்டுள்ளது.
இதற்கான அடித்தளமாக 2019 ஜனவரி 8, மற்றும் 9 தேதிகளில் பொது வேலை நிறுத்தம் முழு அடைப்பு போராட்டம் நடை பெறுகிறதாம்.!!

12 அம்ச கோரிக்கைகள் என்ன?

1. விலைவாசி உயர்வை கட்டு படுத்த வேண்டும்.

2.குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.₹21000 வழங்க வேண்டும்.

3.தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும்.

4.காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

5.தொழிலாளர்களுக்கு பாதகமான சட்டங்களை திருத்தாதே.வேலை கால நிர்ணய சட்டத்தையும் நீம் திட்டத்தையும் ரத்து செய்.

6.பனியன் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியத்தை சட்ட விரோதமாக திருத்தம் செய்திருப்பதை ரத்து செய்.

7.சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே. சிறு குறு தொழில்களை பாதுகாத்திடு.

8.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே.

9.விவசாயத்தை பாதுகாத்திடு.

10.அனைவருக்கும் ஓய்வூதியம் மாதம் ₹6000 ஆயிரம் வழங்கு.

11.முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்குக.

12 .சங்கம் வைக்கின்ற உரிமையை மறுக்காதே.

இந்த இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தம் உண்மையிலேயே தொழிலாளர் மற்றும் மக்கள் நலனுக்கான 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற பி.ஜே.பி அரசிற்கு எதிர்ப்பை காட்டி  போராட்டம் மூலம்  மத்திய அரசிடம் இருந்து பெற்று தரவா?

அல்லது

ஆளும் பி.ஜே.பி. அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறியவா? 

என
தொழிற்சங்கங்கள் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தொழிற்சாலை சட்டங்களையும் தொழிலாளர் சட்டங்களையும்  முழுமையாக அமல் படுத்தினால்  தற்பொழுது நாடு முழுவதும் சட்ட விரோதமாக  செயல் பட்டு வரும் 99 % தொழிற்சாலைகள் மூடப்பட்டு விடும்.

இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை இழந்து விடுவார்களே! தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு என்ன செய்யப்போகிறது.

விலைவாசி உயர்வை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் சொல்லட்டுமே?

குறைந்த பட்ச மாத ஊதியம் ₹21000 ரூபாய் என்பது எந்தெந்த தொழிலாளர்களுக்கு எந்த முதலாளி வழங்க வேண்டும்.?

அனைவருக்கும் ஓய்வூதியம் மாதம் ₹6000 ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமா?  மாநில அரசு வழங்க வேண்டுமா? அல்லது தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு வழங்க மத்திய அரசு உத்தரவிட வேண்டுமா?
இது தொழிலாளர்களுக்கு மட்டுமா?  அல்லது அனைத்து தரப்பு மக்களுக்குமா?

தமிழக அரசு அறிவிப்பு!!

பொது வேலை நிறுத்தத்தில் தமிழக அரசு பங்கு ஏற்க வில்லை.

வழக்கம் போல் அரசு பேருந்துகள் ஓடும்.
அரசு அலுவலகங்கள்  இயங்கும் .
பள்ளி கல்லூரிகள் செயல் படும் .

அப்படியானால் தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்களத்தில் இருந்து தமிழக மக்களை அரசு மீட்டெடுக்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின் போர்க்களம்!
என்ற சொல் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.

மோடி அரசை எதிர்த்து போர் என்றால் தேர்தல் களத்தில் அல்லவா போராட வேண்டும். 

மக்கள் களத்தில் இறங்கி ஏன் போராட வேண்டும்?

போர்க்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்று பொதுமக்களுக்கு  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

போர்க்களம் என்ற பெயரில்
வன்முறைகளை தூண்டி பொது சொத்துக்களையும் பொது மக்கள் சொத்துக்களையும் சேதம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து அவர்களிடமிருந்து  பத்து மடங்கு அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரி இந்த தொழிற்சங்கத்தினர்கள் யார்?

இவர்களுக்கு உண்மையிலேயே நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அக்கறை இருக்கிறதா?

இல்லை! இல்லை!  இல்லவே இல்லை!!

இவர்கள் அனைவரும் மத்திய மாநில அரசுகளை இதுவரையிலும் ஆண்ட. ஆண்டு கொண்டிருக்கும்  ஆளத்துடிக்கும் கட்சிகளின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கம் எனற பெயரில் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சங்கங்களே!!

இவர்கள் அரசூழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி  நாட்டில் நடை பெற்று வரும் அனைத்து  தொழில்கள் சார்ந்த தொழிற்சாலைகளில் பணி புரியும் பல்வேறு விதமான  தொழிலாளர்களுக்கு சங்கங்கள் அமைத்து அந்தந்தந்த தொழிலாளர்களை பாதுகாத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

ஆண்டாண்டு காலமாக. மத்தியிலும் மாநிலத்திலும் இவர்கள் சார்ந்த பல்வேறு கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது ஏன் தொழிலாளர்களின் உரிமைகளை இதுநாள் வரையிலும்  போராடி பெற்று தர வில்லை.

இத்தனை தொழிற்சங்கங்கள் இருந்தும்   தொழிலாளர்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றி கொடுத்துள்ளார்களா என்றால் இல்லை என்றே  பதில்!

எந்த கட்சி ஆண்டாலும் இவர்களால்  தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை.

தொழிலாளர்களை வைத்து தொழிற்சங்கங்கள் என்ற பெயரில்  பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகளினால் தொழிலாளர்களுக்கு உரிமைகள் கிடைப்பது என்பது சாத்தியம் இல்லை.

தொழிலாளர்களை பாதுகாக்க இவர்கள் அமைதி போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் .

அரசூழியர்களின் கோரிக்கைக்காக போராட்டம் என்ற பெயரில் மக்கள் பணி செய்வதினை தடுக்கின்றனர்.

ஆசிரியர்களின் கோரிக்கைக்காக போராட்டம் என்ற பெயரில் மாணவர்களின் கல்வியை தடுக்கின்றனர்.

பொது சொத்துக்களையும் பொதுமக்கள் சொத்துக்களையும் சேதம் விளைவிக்கின்றனர்.

பொது மக்கள் தாக்கப்படுகின்றனர்
காவல் துறையினர் தாக்கப்படுகின்றர்.

அரசு பேருந்துகளை உடைக்கின்றனர்.
ரயில் மறியல் செய்கின்றனர்.
வணிகர்களின் கடைகளை அடித்து உடைக்கின்றனர்.

பொது மக்களுக்கு பொது இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

பொது மக்களின் இயல்பு வாழ்க்கையினை முற்றிலும் தடுக்கின்றனர்.

தினக்கூலி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கின்றனர்.

பொது மக்களின் வருவாயினை தடுக்கின்றனர்.

பல ஆயிரம் கோடி அரசுக்கு வரும்  வருவாயினை திட்டமிட்டு பறிக்கின்றனர்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.

வேலை நிறுத்தங்களில் பங்கு பெறாத கம்மங்கூழ்  விற்பனை செய்யும் சாலையோர தள்ளு வண்டி கடை முதல் பிரியாணி கடைகளையும் விட்டு வைப்பதில்லை.

இது தான் இவர்களின் மக்கள் நல போராட்டமாம்!

மத்திய அல்லது மாநில அரசுகள் இந்த போராட்டங்களில் பங்கு எடுக்கிறதா என்றால் இல்லை.

பொது மக்கள் தானாக முன் வந்து இவர்களின் போராட்டத்தில் பங்கு எடுக்கின்றனரா என்றால் இல்லை.

தொழிலாளர்கள் அனைவரூம் விருப்பப்பட்டு போராட்டத்தில் பங்கு பெறுகின்றனரா இல்லை?

வணிகர்களும் தொழிற்சாலைகளும் தானாக முன் வந்து கடைகளையும் தொழிற்சாலைகளையும் அடைக்கிறார்களா என்றால் இல்லை.

பேருந்து சிற்றுந்து ஆட்டோ கார் போன்ற வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் தாமாக முன் வந்து வாகனங்கள் இயக்கத்தினை நிறுத்துகிறார்களா என்றால் இல்லை.

அப்படியானால் பொது வேலை நிறுத்தம் எப்படி வெற்றி அடையும்?

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கத்தினர் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தி கடைகளை வலுகட்டாயமாக அடைக்க சொல்லி ஊர்வலமாக வருவார்கள்.

யாராவது மீறி கடைகளை அடைக்க வில்லை என்றால் தாக்குதல் நடத்துவார்கள்.

காவல் துறையினரால் அனைத்து மக்களுக்கும் முழுமையான அளவில்  பாதுகாப்பு வழங்க இயலாது.

போராட்ட காரர்களை காலையில் கைது செய்தால் மாலையில் விட்டு விடுவார்கள் என்ற தைரியம்.

பயம்!  மரண பயம்!!
உயிருக்கும் உடமைகளுக்கும் போராட்ட காரர்களினால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்ற பயத்தில் தான் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அடைக்கின்றனர்.

போராட்டத்தினால் போராட்ட காரர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை.

ஒட்டு மொத்த இந்திய குடிமக்கள் அனைவரும் தான் பாதிக்கப்படுகின்றனர்.

இது நாள் வரை பல்வேறு விதமான போராட்டங்களை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

திருப்பூரிலும் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்  கலந்து கொள்வதாக பொது வேலை நிறுத்தம் என துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்துள்ளனர். 

பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை சார்ந்த தொழில் நிறுவனங்கள்.

பல லட்சக்கணக்கான பல்வேறு தொழில்கள் சார்ந்த தொழிலாளர்கள்.

இந்த தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிற்சாலை சட்டங்கள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த  சட்ட திட்டங்கள் படி இயங்குகிறதா என்றால் இல்லை.

இங்கு தொழிலாளர்களுக்கு முழுமையான அளவில் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் இல்லை.

சாய ஆலை தொழிற்சாலைகளினால் நல்லாறு மற்றும் நொய்யலாறு மாசு பட்டு பொது சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

சாய ஆலை கழிவு நீரினால் சுமார் மூன்று லட்சம் ஏக்கர்  விவசாய நிலங்கள் பாழ் பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமும் விவசாயமும் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.

தொழிலாளர்கள் பல்வேறு தொழிற்சங்கங்களில் தங்களை இணைத்து கொண்டு ஆண்டு சந்தா செலுத்தி வருகிறார்கள்.

தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை தொழில் அதிபர்களினால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் தொழிற்சங்கத்தின் உதவியை நாடுகின்றனர்.

தொழிலாளர்களுக்கு உரிய நியாயமான கோரிக்கையை பெற்று தர தொழிலாளர்களிடம் ஐந்தில் இருந்து பத்து சதவீதம் பணமும்  தொழில் அதிபர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட. தொகையினையும்  பெறுகின்றனர்.

சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகியாகவோ அனுதாபியாகவோ தான் உள்ளனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் நிதியாக பல லட்சம் இவர்களுக்கு வாரி  வழங்குகின்றனர்.

எனவே பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் மீது தொழிற்சங்கத்தினரிடம் கொடுக்கும்
புகார்கள் நியாயமாக முடித்து வைக்கப்படுவதில்லை.

தொழிலாளர்களுக்கு முழுமையான அளவில் பாதுகாப்பில்லாமல் சட்ட விரோதமாக செயல்படும் தொழிற்சாலைகளுக்கு  ஏதிராக தொழிற்சங்கங்கள் ஏன் போராட முன் வருவதில்லை.

அனைத்தும் தங்களை வளப்படுத்தி கொள்ளவே தொழிற்சங்கங்களே தவிர தொழிலாளர் நலன்களுக்காக இல்லை என்பதினை தொழிலாளர்களும் பொது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்பொழுது அறிவித்திருக்கும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தினால்  தொழிலாளர்களுக்கான 12 அம்ச கோரிக்கையினை மோடி அரசிடம் இருந்து போராடி பெற்று தருவார்களா ? 

மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மோடி அரசுக்கு எதிராக  ஒட்டு மொத்த அரசியல் எதிர்கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கத்தினரின் சூழ்ச்சி தான் இந்த இரண்டு நாள் பொது  வேலை நிறுத்தத்தின் முக்கிய நோக்கமே தவிர. மக்கள் நலன்களுக்கான வேலை நிறுத்தம் இல்லை என்பதினை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் கட்சிகளின் சதுரங்க  விளையாட்டில் ஒட்டு மொத்த இந்திய மக்களையும் பகடை காயாக பயன் படுத்தி துயரப்பட வைப்பது என்பது  ஏற்புடையது அல்ல.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்.
உலாபேசி ;98655 90723

No comments:

Post a Comment