Thursday 23 August 2018

நல்லாற்றை பாதுகாப்போம்

பாதுகாப்போம்! பாதுகாப்போம்!!

"நல்லாறு "மற்றும் "நஞ்சராயன்" குளத்தினை பாதுகாப்போம்!!

ஆறு ,குளம் ,குட்டை, ஏரி நீர்நிலைகளை காப்பது இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 51 A வழங்கி உள்ள நமது கடமையாக கொண்டு
"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " சார்பாக
"நல்லாறு பாதுகாப்புக்குழு "
ஒன்றினை ஏற்படுத்தி உள்ளோம்.

நல்லாறு Vs நஞ்சராயன் குளம்!

நல்லாறு பாதுகாப்புக் குழுவினரின் முதற்கட்ட நேரடி கள ஆய்வு பணிகள் நிறைவடைந்தது.

நெஞ்சை உறைய வைக்கும் பல அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை காண நேரிட்டது.

நல்லாறு :

இது  அசுத்தம் நிறைந்த மனித உயிருக்கு சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் கேடு கெட்ட. ஆறாக காட்சி அளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் இருந்து  திருமுருகன் பூண்டி , அங்கேரிபாளையம், பிச்சம்பாளையம் வழியாக ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் நஞ்சராயன் குளம் வரை செல்லும் மிக குறைந்த நீளம் கொண்ட ஆறு தான் நல்லாறு ஆகும்.

மழைக்காலங்களில் மட்டுமே நல்லாற்றில் மழை நீர் வழிந்தோடும்.

பெயர் தான் நல்லாறு!

ஆனால் ஆக்கிரமிப்புகளினால் ஆங்காங்கே குறுகிய ஓடைகளாக  மாற்றப்பட்டும் கழிவுகளாலும்  கழிவு நீர்களினாலும் பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும்  மற்றொரு திருப்பூர் கூவமாக கெட்ட ஆறாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாற்றில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட  பலர் வீடுகளை இழந்து  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் மடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல்.

அவிநாசி சீனிவாசபுரத்தில் தி.மு.க கட்சியின் மன்ற படிப்பகம் நல்லாற்றுக்குள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது.

இது போல் பல ஆக்கிரமிப்புகள் ஆற்றின் இரு கரையோரம் காணப்படுகிறது.

அவிநாசி முதல் திருமுருகன் பூண்டி வரையிலும்  நல்லாறு வறண்டு காணப்படுகிறது.

ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் சிறிய அளவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

ஆனால் திருமுருகன் பூண்டியில் இருந்து நஞ்சராயன் குளம் வரையில் தான் அனைத்து பகுதிகளில் இருந்தும் சாக்கடை கழிவு நீர் நல்லாற்றிற்குள் நேரடியாக கலக்கப்படுகிறது.

நல்லாறு முழுவதும் சாக்கடை கழிவு நீர்களும், சாய சலவை ஆலை கழிவு நீர்களும் கழிவுகளும் கொட்டப்பட்டிருப்பதினை காண முடிகிறது

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி என தமிழக அரசால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நல்லாற்றில் கழிவு நீரினை விட்டு மாசுபடுத்தி வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எங்கும் துர்நாற்றமும் ஆற்று ஓரம் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருவதினை நமது கள ஆய்வில் நேரில் காண நேரிட்டது.

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியினையும் சொல்லொணா துயரத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் பல சாய ஆலை தொழிற்சாலைகள் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

அந்த தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளையும் குப்பைகளையும் நேரடியாக ஆற்றில் கொட்டி வருகிறார்கள்.

நமது புகாரின் பேரில்  பொதுப்பணித்துறையினர் இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஆளவீடு செய்ததில் 15 க்கும் மேற்பட்ட சாய ஆலை  தொழிற்சாலைகள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிய வருகிறது.

தற்பொழுது அளவீடு செய்யும் பணி நடை பெறுவதாக தெரிய வில்லை

அவிநாசியில் இருந்து நஞ்சராயன் குளம் வரையில் ஆற்றின் இருபுறமும் அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பார பட்சம் பார்க்காமல் திருப்பூர் மாவட்ட பொதுப்பணிதுறை -நீர்வள ஆதாரத்துறையினர் அகற்ற வேண்டும் எனக்கோருகிறோம்

நல்லாறு நாசமாய் போனதற்கு யார் காரணம்?

நமது கடமைகளையும் உரிமைகளையும்  மறந்த பொது மக்கள்
சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் சாய ,சலவை ஆலை தொழிற்சாலை உரிமையாளர்கள்
திருமுருகன் பூண்டி பேரூராட்சி நிர்வாகம்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம்
மாசுகட்டுப்பாட்டு வாரியம்
பொதுப்பணித்துறை -நீர்வள ஆதாரத்துறை
உள்ளிட்ட கடமை தவறிய அரசூழியர்கள் தான் இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டினை பகிரங்கமாக பதிவு செய்கிறோம்.

நீர்நிலைகளை பாதுகாக்கும் பொறுப்புடைய அரசூழியர்களான
கிராம நிர்வாக அலுவலர்கள்  வட்டாட்சியர்கள்
கோட்டாட்சியர்
சார் ஆட்சியர்
மாவட்ட செயல் துறை நடுவராகிய மாவட்ட ஆட்சித்தலைவர்
போன்ற  இவர்கள்  கடமையினை செய்யாத காரணத்தினால் நல்லாறு மற்றும் நொய்யலாறு பாழ் பட்டு கிடக்கிறது.

நொய்யலாற்றில் திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் கலந்ததின் விளைவு சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாய் போய் விவசாயிகளின் வயிற்றில் மண் அள்ளி போட்டு விட்டார்கள்.

பின்னலாடை தொழில் மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தரும் திருப்பூர் என மார்தட்டி பெருமையாக சொல்லி கொண்டிருக்கலாம்.

பின்னலாடை தொழில் அதிபர்கள் மாட மாளிகைகளுடன் உல்லாசமாய் வாழ்கின்றனர்.இவர்களுக்கு எதனை பற்றியும் கவலை இல்லை.

சாய ஆலை சுத்தீகரிப்பு நிலையங்கள் அமைத்த பிறகு நல்லாறு மற்றும் நொய்யலாற்றில் சாயக்கழிவு நீர் எவ்வாறு கலக்கப்படுகிறது என்பதினை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பதில் சொல்லி ஆக வேண்டும்.

கோரிக்கைகள் :

1.ஆடு ,மாடு ,கோழி ,பன்றி ,மீன் ,முட்டை போன்ற மாமிச கழிவுகளையும் குப்பைகளையும்
கட்டிட கழிவுகளையும் வியாபாரிகளும் பொது மக்களும்  நல்லாற்றில்  கொட்டுவதினை தவிர்க்க வேண்டுகிறோம்.

2.சாய ஆலை, பிளீச்சிங் ஆலை  , பிரிண்டிங் ஆலை ,போன்ற பின்னலாடை தொழில் சார்ந்த நிறுவனங்கள் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக நல்லாற்றில் கலப்பதினை தவிர்க்க வேண்டுகிறோம்.

3.சாய ஆலைகளில் சேகரமாகும் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து நல்லாற்றிலும் அதன் கரைகளிலும் கொட்டுவதினை தவிர்க்க வேண்டுகிறோம்.

4.தனியார் செப்டிக் டேங் (Sevege) கிளீனிங் லாரிகள் கழிவுகளையும் கழிவு நீரினையும் நல்லாற்றில் விடுவதினை தவிர்க்க வேண்டுகிறோம்.

5.மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனங்களிலும் குப்பை அள்ளும் வாகனங்களிலும் சேகரிக்கப்படும் கழிவுகளை நல்லாற்றில் கொட்டுவதினை தவிர்க்க வேண்டுகிறோம்

6.வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில்
இருந்து பொது கழிவு நீர்க்கால்வாய்கள் மூலம் வெளியேறும் கழிவு நீரினை நேரடியாக  நல்லாற்றில் கொண்டு சென்று நல்லாற்றினை மாசு படுத்தி வருவதினை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டுகிறோம் .

உடனடியாக மாநகராட்சி பொது கழிவு நீர் கலப்பதினை தடுத்தால் மட்டுமே நல்லாற்றினை பாதுகாக்க முடியும்.

7.திறந்த நிலை கழிவு நீர் கால்வாய் கழிவு நீரினையும் மாற்று ஏற்பாடுகள் செய்து பாதாள சாக்கடை மூலம் பொது சுத்தீகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்தீகரிக்க மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் .

8.நல்லாற்றின் இருகரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும்  உடனடியாக அப்புற படுத்த கோருகிறோம்.

9.சாய ஆலை கழிவு நீரினை நேரடியாக
ஆற்றில் கலக்கும் ஆலைகளின் உரிமத்தினை ரத்து செய்வதுடன்  குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க  கோருகிறோம்.

10.கழிவுகள் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் குற்ற வழக்கு பதிவு செய்ய கோருகிறோம்.

11.ஆற்றின் கரையோரம் நிரந்தர எச்சரிக்கை பலகைகள் வைக்க கோருகிறோம்.

12.மாவட்ட நிர்வாகம் சீமை கருவேல மரங்களை  முற்றிலும் அகற்றி நல்லாற்றை தூர்வாரி சுத்தப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய கோருகிறோம்.

13.செயல் படாமல் இருக்கும் சுத்தீகரிப்பு நிலையத்தினை செயல் படுத்தி கழிவு நீரினை சுத்தீகரித்து நஞ்சராயன் குளத்தில் விடக்கோருகிறோம்.

14. ஆற்றின் குறுக்கிலும் இரு புறமும் தாறுமாறாக ஆற்றிற்குள்  பதிக்கப்பட்டுள்ள சாய ஆலை சுத்தீகரிப்பு நிலையம் செல்லும் குழாய்களை உடனடியாக அப்புறபடுத்தி ஆற்றின் மேற்பகுதியில் வெளியில் தெரியும் வகையில் உயரமாக மாற்றி அமைக்க கோருகிறோம்.

15. ஆற்றிற்குள் செல்லும் சாயக்கழிவு நீர் குழாய்களை பராமரிப்பு பணி என்ற பெயரில் சாய ஆலை உரிமையாளர்களினால் அவ்வபோது ஆற்றிற்குள் சாயக்கழிவு நீர் திட்டமிட்டு  கலப்பதினை தடுக்க கோருகிறோம்

16.வர்த்தக நிறுவனங்கள் வியாபாரிகளின் மாமிச கழிவுகளை மாநகராட்சியின் பாதுகாக்கப்பட்ட  வாகனங்கள் மூலம் தினமும் சேகரிக்க வேண்டுகிறோம்

17.அங்கேரிபாளையம் பகுதியில் நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின்  உடைக்கப்பட்ட ஒரு பகுதி தடுப்பு சுவரினை கட்ட வேண்டுகிறோம்.

18.நல்லாற்றின் இருபுறமும் கரையை பலபடுத்த வேண்டுகிறோம்.

19.திருமுருகன் பூண்டியில் இருந்து அங்கேரிபாளையம் வரை நல்லாற்றின் கரையினை இணைக்கும் சாலையை செப்பனிட வேண்டுகிறோம்

நஞ்சராயன் குளம்:

இதனை நஞ்சு கலந்த குளம் என அழைப்பதே நல்லது.

தமிழ்நாடு அரசு -பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் (முறைசாரா குளமாக ) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் : திருப்பூர்

வட்டம் : ஊத்துக்குளி

ஒன்றியம் : ஊத்துக்குளி

கிராமம் : சர்க்கார் பெரியபாளையம்.

நீர் நிரப்பு பரப்பு : 96 சதுர மைல்கள்

நீர் நிரப்பு பகுதி :10.6 மில்லியன் சதுர அடி (அ) 243.34 ஏக்கர்

கொள்ளளவு : 89.34 மில்லியன் கன அடி (அ) 2.5289 மில்லியன் கன அடி

மிகு வெள்ள நீர் அளவு : 5422 கன அடி/விநாடி (அ) 153.48 கன மீட்டர் /விநாடி

குளத்தின் முழு நீர்மட்டம் : 37.50 அடி (அ)
11.43 மீட்டர்

குளத்தின் மிகு நீர்மட்டம் : 39.50 அடி (அ)12.4 மீட்டர்

கரையின் மேல்மட்ட அளவு : 45.50 அடி (அ) 13.87 மீட்டர்

மதகுகளின் எண்ணிக்கை : 02

மதகின் கிடை மட்ட அளவு 01: 17.32 அடி(அ) 5.28 மீட்டர்

மதகின் கிடை மட்ட அளவு : 02: 30.21 அடி(அ) 9.20 மீட்டர்

நீரின் ஆழம் : 20.18 அடி (அ)6.15 மீட்டர்

கரையின் நீளம் : 2297 அடி (அ)700.13 மீட்டர்

கலிங்கின் நீளம் : இடது 367 அடி (அ) 111.86 மீட்டர்

கலிங்கின் நீளம் : வலது 250 அடி (அ)78.94 மீட்டர்

ஆயக்கட்டு : 108 ஏக்கர்

சுத்தீகரிப்பு நிலையம் :

குளத்தினை புனரமைப்பு செய்து சுத்தீகரிப்பு நிலையம் கட்டும் பணிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்கி நிதியில் (Environment Protection Renewable Energy Devlopment Fund ) இருந்து ₹400 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்: சித்ரா ஹெம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி
109, அம்மன் சந்நதி வீதி,
செங்கோட்டை -627 809.

மேற்காண் ஒப்பந்ததாரர் மூலம் ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள்,மாதம் ஆண்டு குறிப்பிடப்பட வில்லை.

நமது கள ஆய்வில் கண்ட அதிர்ச்சி தகவல்!!

மாசடைந்து வரும் நல்லாற்று நீர் நேரடியாக நஞ்சராயன் குளத்தில் கலக்காமல் இருப்பதற்காக தடுப்பணை கட்டி  குளத்தினை புனரமைத்து சுத்தீகரிப்பு நிலையம் கட்டி நீரினை சுத்தீகரிப்பு செய்து குளத்தில் விடுவதற்காக  சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி நிதியில் இருந்து ₹400 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

நல்லாறு நீரினை தேக்கி அங்கிருந்து சிறிய கால்வாய் மூலமாக சுத்தீகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்தீகரித்து மீண்டும் நஞ்சராயன் குளத்தில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு சுத்தீகரிக்க படாமல் குளத்திற்கு  வெளிப்புறம் வழியாக கால்வாய் அமைத்து  நீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது.

நீர் தேக்கத்தில் மதகுகள் அடைக்கப்பட்டிருந்தாலும் நீர் நிறைம்பி வழிந்து நேரடியாக குளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

நீர் தேக்கம் ழுழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து சாய ஆலை மற்றும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுகிறது.

சுத்தீகரிப்பு நிலையம் செயல் படாமல்  பூட்டப்பட்டிருந்தது.

243 ஏக்கர் நில பரப்பளவில் நஞ்சராயன் குளம்  கண்கொள்ளா காட்சி அளிக்கிறது.

குளம் முழுவதும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டி வளர்ந்துள்ளது.

அங்கும் சாய ஆலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை பறவைகளையும் காண முடிகிறது.

மீன்களை பிடிப்பதோ பறவைகளை வேட்டையாடுவதோ சட்டப்படி குற்றம் என பொது பணித்துறையால் வைக்கப்பட்ட தகவல் பலகை புதருக்குள் மறைந்துள்ளது.

ஆனால் பலர் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக  தூண்டிலிலும் வலை விரித்தும் கழிவு நீரில் உயிர் வாழும் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர்.

ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.கழிவு நீரினை கால்நடைகள் குடிப்பதினையும் காண நேரிட்டது

குளத்தின் விபரங்கள் அடங்கிய தகவல்
பலகை உடைந்து தலை கீழாய் தரையில் தொங்கி கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையினரின் அலட்சிய போக்கினால் சுத்தீகரிப்பு நிலையம் செயல் படாமல் கழிவு நீர் குளத்திற்குள் நேரடியாக செல்கிறது.

₹400 இலட்சம் ரூபாய் அரசு பணத்தினை திட்டமிட்டு வீணடித்து உள்ளனர்.

இதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

நல்லாற்று நீர் மாசடையாமல் நல்ல நீராக மாற்றிடவும்  , நீலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடவும் ,குளம் முழுவதும் நிறைந்து உபரி நீர் விவசாயத்திற்கும் பயன்படும் வகையிலும் நமது எதிர்கால  சந்ததியினராவது பயன் அடைய வேண்டுமானால்  நாம் இப்போதாவது நல்லாற்றினை பாதுகாக்கும் முயற்சியில் இறங்குவது காலத்தின் கட்டாயமாக கருதுகிறோம்.

கடமை தவறிய திருப்பூர் மாவட்ட  அரசூழியர்களை நம்பி இனிமேல் எந்த வித  பயனில்லை!

நாமே களப்பணிக்கு இறங்கினால் மட்டுமே தீர்வு காண முடியும்.

எனவே
எனதருமை நண்பர்களே!
சகோதர சகோதரிகளே!
மாணவ செல்வங்களே!
இளைஞர்களே!
சமூக ஆர்வலர்களே!
சமுதாய சிந்தனையாளர்களே!
சுற்று சூழல் ஆர்வலர்களே!
இயற்கை ஆர்வலர்களே!
தொண்டு நிறுவனங்களை சார்ந்த நண்பர்களே!
பொது மக்களே
வாருங்கள்!
ஓர் அணியாக திரண்டு நல்லாறு முழுவதினையும் தூர்வாரி சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றி நமது கடமைகளை சிறப்புடன் ஆற்றி நல்லாற்றினையும் நஞ்சராயன் குளத்தினையும் "நல்லாறு பாதுகாப்புக்குழு " வில் இணைந்து பாது காத்திடுவோம் என தங்களின் பொற்பாதம் பணிந்து வேண்டுகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

தொடர்புக்கு :
ஆ.பழனிக்குமார்
ஒருங்கிணைப்பாளர்
நல்லாறு பாதுகாப்புக்குழு
உலா பேசி :97910 50513

குறிப்பு : நல்லாறு பாதுகாப்பு குழுவில் இணைய விரும்பும் நண்பர்கள் 98655 90723 என்ற "நல்லாறு பாதுகாப்புக்குழு "வாட்ஸ் ஆப் எண்ணிற்கு உங்கள் பெயர் ,ஊர் ,தொடர்பு எண்கள் தெரிவிக்கவும்.
நன்றி.

No comments:

Post a Comment