Monday 5 March 2018

போக்குவரத்து காவலூழியர்களே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தலாமா?

போக்குவரத்து காவலூழியர்களே  போக்குவரத்திற்கு  இடையூறு ஏற்படுத்தலாமா?

திருப்பூர் வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர்  நாகராஜன் அவர்களின் கவனத்திற்கு!

தங்களை பற்றி எந்த விதமான புகார்களும் இது நாள் வரை எங்கள் கவனத்திற்கு வரப்பெற வில்லை.

வாழ்த்துக்கள்.வரவேற்கிறோம்.

ஆனால் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களை பற்றிய பல புகார்கள்  தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

லஞ்சம் கொடுத்து பாதிகப்பட்டவர்கள் தான் பெரும்பாலும் நம்மிடம் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் 05.03.2018 அன்று இரவு சுமார் 9.30 மணி அளவில் தாங்கள் திருப்பூர் அவிநாசி சாலை அனுப்பர்பாளையம் புதூர் சிக்னல் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்ததினை நேரில் காண நேரிட்டது.

தங்களது வாகனம் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிரதான சாலையின் நடுவில் மூன்று காவலூழியர்கள் நின்று கொண்டு இருச்சக்கர வாகனத்தில் வருபவர்களை திடீரென நிறுத்தி தலை கவசத்தினை கழற்றி வாயை ஊத சொல்கின்றனர்.

காவலூழியர்கள் தங்களது வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு குனிந்து  ஊதுபவர்களின் மூச்சு காற்றினை நுகர்ந்து அவர் மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டுகிறாரா இல்லையா? என்பதினை பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். இதனால் காவலூழியர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாக கூடும்.

சாலையின் நடுவில் இருச்சக்கர. வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி அதிரடியாக சோதனை செய்வதால்  பின்னால் வரும் வாகனங்கள் திடீரென பிரேக் மிதித்து நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.

இதனால் எதிர்பாரா விதமாக விபத்து ஏற்படும் சூழலும் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறும் ஏற்படுவதினை காண முடிந்தது

காவலூழியர்களுக்கும் பாதுகாப்பில்லா நிலை ஏற்படுகிறது..

போக்குவரத்து காவலூழியர்களே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது

போக்குவரத்து உயர் அதிகாரிகள் யாராவது இவ்வாறு  பிரதான சாலையில் வாகனங்களில் செல்பவர்களை திடீரென நிறுத்தி " ஆப்பரேசன் டாஸ்மாக் " என பரிசோதனை ஏதாவது செய்ய உத்தரவு வழங்கி உள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோரிக்கை ;

எனவே போக்குவரத்திற்கு  இடையூறு இல்லாத பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி  சோதனை செய்யும் கருவி மூலம் பரிசோதனை செய்து மது அருந்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை
எடுக்கும் படி வேண்டுகிறோம்.,

மது அருந்தி இருச்சக்கர வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம் தான்.

ஆனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மது அருந்தி தான் வாகனம்  ஓட்டுகிறார்கள் என சந்தேக கண்ணுடன் பார்ப்பதும்  ஆங்காங்கே சந்து பொந்தெல்லாம் காவலூழியர்களை  நிறுத்தி குடிச்சிருக்கியா வாயை ஊது என சொல்வது  மனித உரிமை மீறல் ஆகாதா? 

மது அருந்தாத பாதிக்கப்பட்ட பலர்  நம்மிடம் முறை இடுகின்றனர்.

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் ஐந்து இடங்களிலாவது காவலூழியர்கள் வாகனங்களை நிறுத்தி டிரிங்ஸ் சாப்பிட்டீங்களா  வாயை ஊது என ஊத சொல்வதாகவும் பொது இடங்களில் பலர் முன்னிலையில் வாயை ஊதி காண்பிப்பது தங்களுக்கு மிகுந்த மன வருத்தம் அளிப்பதாகவும்  இதற்கு ஏதேனும்  தீர்வு காணுங்கள் என. நம்மிடம் கோரிக்கை வைக்கின்றனர் .

இதற்கு தீர்வு தான் என்ன?

அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு
47 க்கு எதிராக தமிழக  அரசே உணவுக்கல்லாத  போதையூட்டும் மதுபான வகைகளை தயாரித்து விற்பது சட்டப்படி குற்றம் என தெரிந்தே
டாஸ்மாக் மூலம் விற்பனை செய்வது
எவ்வளவு வெக்கக்கேடான செயல்

நீதி வேண்டி நீதிமன்றம் சென்றால் சாராயம் காய்ச்சி விற்பது  மாநில அரசின் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என அங்கே நீதி மறுக்கப்படுகிறது.

வீதி தோறும் டாஸ்மாக் மதுபான கடைகள்!

போதையில் தள்ளாடும் பரிதாபத்திற்குரிய மக்கள்!

டாஸ்மாக் மதுபான பார்கள் அனைத்தும் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வருகிறது!

24 மணி நேரமும் முறைகேடாக கூடுதல் விலைக்கு அரசு மதுபானங்கள் அமோக விற்பனை! 

இது பல காவலூழியர்களுக்கு தெரிந்திருந்தும் நடவடிக்கை இல்லை!

பார்க்கிங் வசதிகளுடன் நவீன  பார் என விளம்பரம்!

வாகனங்களில் வந்து மது அருந்த அனுமதி அளித்தது யார்?

ஏன் காவல் துறையினர்  இதனை வேடிக்கை பார்க்கின்றனர்.?

குடிகாரர்களால் காவல் துறைக்கு வருமானம்!

இதனை பயன்படுத்தி குடிமகன்களிடம் 
இருந்து லஞ்சம் பெற்று சிறப்புடன்  வலம் வரும் ஒரு சில  காவலூழியர்கள்!

ஒரு நாள் சராசரியாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிரிங் & டிரைவ்  வழக்கு பதிவு செய்ய காவலூழியர்களுக்கு காவல் உயர் அதிகாரியின் உத்தரவு  வேறு!

உத்தரவினை நிறைவேற்ற நாள் முழுவதும் குடிமகன்களை தேடி அலைந்து திரியும் காவலூழியர்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் 202 டாஸ்மாக் கடைகளுக்கு தினமும் வாகனங்களில் வந்து மது அருந்தி செல்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்காமல்  ஒட்டு மொத்த வாகன ஓட்டிகளையும் பரிசோதனை என்ற பெயரில் துன்புறுத்துவது  ஏற்புடையது தானா? என்பதினை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

டாஸ்மாக் கடையின் முன்பு தினமும்  போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஏன் காவல் துறையினருக்கு தெரிய வில்லை!

ஆமாம் அரசு மதுபான கடையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் மது  அருந்தி வாகனம் ஒட்டுபவர்கள் மீது வழக்கு பதிய செய்யக் கூடாதாமே?

ஒரு சில டாஸ்மாக் கடையின் முன்பு வாகனங்களை ஒழுங்கு படுத்த காவலூழியர்கள் வேறு!  வெக்கக்கேடான செயல்.

அரசு மதுபானங்களை விற்பனை செய்ய மாவட்டம் தோறும் துணை ஆட்சியர்கள் வேறு!

மது விலக்கு காவல் துறையினர் வேறு!

குடி குடியை கெடுக்கும்!  உடல் நலனிற்கு தீங்கு விளைவிக்கும் என மது பாட்டில்களில்  விளம்பரம் வேறு!

குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அபராதம் வேறு!

டாஸ்மாக் கடைகளை மூடினால் அரசுக்கு வருமானம் போய் விடுமாம்!

சபாஷ்! 

மொத்தத்தில் குடிமகன்களினால் அரசுக்கு மட்டுமின்றி அரசியல் வாதிகளுக்கும்  ,பல வழிகளில் வருமானம்!

பூரண மது விலக்கு ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு!

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
மாநில இணை செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723
07.03.2018




No comments:

Post a Comment