Sunday 3 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0040 மகப்பேறு உதவி தொகை விண்ணப்பத்திற்கு லஞ்சம்

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO ;0040/2019 ;நாள் :03.02.2019*

*குற்றம் நடந்தது என்ன*?

உண்மை சம்பவம்!

குற்றவாளி யார் ?

*ஏழை எளிய கர்ப்பிணி பெண்களிடம் லஞ்சம் வாங்கிய திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்*

தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் .முத்து லெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி தொகைகள் வழங்கி வருகிறது.

திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம் அமைத்து கர்ப்பிணி தாய்மார்களை கண்டறிந்து தேசிய நல வாழ்வு இயக்கம் (NATIONAL HEALTH MISSION ) தமிழ்நாடு என்ற பெயரில் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு அடையாள அட்டை வழங்கி வருகிறார்கள்.

01.02.2019 அன்று திருப்பூர் அங்கேரிபாளையத்தில் செயல் படும் அங்கன்வாடி பள்ளியில் மருத்துவ முகாம் நடை பெற்றது.

அந்த பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை மற்றும் மகப்பேறு நிதி உதவி பெற பதிவு செய்ய வந்துள்ளனர்.

முகாமில் பதிவு செய்து பிக்மி எண்ணுடன்  அடையாளஅட்டை  வழங்க ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களிடம் இருந்தும் ₹300 ரூபாய் (முன்னூறு) லஞ்சம் பெற்றுள்ளனர் .

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த சரவணன் லாவண்யா தம்பதியினர் இது குறித்து  அங்கேரிபாளையம் நண்பர்கள் குழுவிற்கு புகார் தெரிவித்துள்ளார் .

தகவல் கிடைத்தவுடன்
நண்பர்கள் சம்பவ இடம் சென்றுள்ளனர் .

அங்கு இரு செவிலியர்கள் கர்ப்பிணி பெண்களிடம் விபரம் கேட்டு விண்ணப்பம் பூர்த்தி செய்து அடையாள அட்டை வழங்கி கொண்டிருந்தனர்.

செவிலியர் ரம்யா என்பவரிடம் ₹ 300 ரூபாய் எதுக்கு வாங்கினீர்கள் என கேட்ட போது விண்ணப்பம் பதிவு செய்வதற்காக தான் என்று சொல்கிறார்.

லஞ்சமா என்றால் இல்லை என்கிறார்.

நன்கொடையா என்றால் இல்லை என்கிறார்.

விண்ணப்ப கட்டணமா என்றால் இல்லை என்கிறார்.

யார் வாங்க சொன்னது என்றால் யாரும் வாங்க சொல்ல வில்லை நாங்க  தான் வாங்கினோம் . என்கிறார்.

லஞ்சம் வாங்க தூண்டிய ஊழியர்களை காட்டி கொடுக்காமல் இவரே பலிகடா ஆகிவிட்டார்.

சம்பளம் வாங்குகிறீர்களா என்றால் ஆம் என்கிறார்.

புகார் அளித்தவரிடம் எதுக்கு ₹300 ரூபாய் கேட்டீர்கள் என்றால் ஏண்டா இருக்கிறத கொடுடா என்கிறார்.

இளம் பெண் செவிலியர் ரம்யா பணிக்கு வந்து ஓர் ஆண்டு தான் ஆகிறதாம்.

வெளிப்படையாக ₹300 லஞ்சம் கேட்டு வாங்கும் அளவு வளர்ச்சி அடைந்துள்ளார்

செவிலியர் பணிக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை குடும்பத்தினை சார்ந்தவர்களாக தான் இருப்பார்கள்.

செவிலியர் பணி என்பது மிகவும் மகத்தான சேவையாகும்.

ரம்யா இவருக்காக லஞ்சம் பெற்றதாக தெரிய வில்லை.

இவரை லஞ்சம் வாங்க தூண்டியது யார்?

லஞ்சம் வாங்கும் அரசூழியர்கள் இவர்களை போன்ற அப்பாவி ஊழியர்களை தங்களுக்கு சாதகமாக  பயன்படுத்தி கொள்கின்றனர்.

இந்த லஞ்ச பணம் யார் யாருக்கு செல்கிறது.?

இவர்களை கண்காணிக்க வேண்டிய மாவட்ட மாநகர சுகாதாரத்துறை அலுவலர்கள் கடமை தவறி விட்டார்களா?

தாய் கருவறையில் இருக்கும் குழந்தை வெளி உலகம் வரும் முன்னரே லஞ்சம் கொடுக்கும் நிலை மாறுவது எப்போது?

வேதனை! வேதனை!
நெஞ்சு பொறுக்குதில்லையே

விண்ணப்பத்திற்கே ₹300 லஞ்சம் என்றால் இலவச மகப்பேறு நிதி உதவி தொகை பெற எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டுமோ?

அரசு மருத்துவமனைகளிலும் பிரசவம் பார்க்க லஞ்சம் பெறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஒவ்வொரு அரசுத்துறைகளிலும்  பெரும்பாலான ஊழியர்களும் தினமும் கணிசமான தொகையினை சாதுர்யமாக லஞ்சம் பெற்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

104 எண்ணில் புகார் தெரிவித்த போது புகாரினை பதிவு செய்து விட்டதாகவும் அரசு மருத்துவமனை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை மண்டல அலுவலரிடம் (ZONAL OFFICER ) எழுத்து பூர்வமாக புகார் அளிக்குமாறும் கூறி உள்ளார்கள் .

திருப்பூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் பூபதியிடம் புகார் தெரிவித்த போது அலுவலகம் வந்து எழுத்து பூர்வமாக
புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

லஞ்சம் பெறுவது குறித்து விசாரணை செய்ய ஊழியர் ஒருவரை உடனே
அனுப்புமாறு கூறியதற்கு ஊழியர்கள் யாரும் இல்லை என்கிறார்.

மெடிக்கல் ஆபிசர் வேலை நிறுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளிக்கலாம் என்றால் புகார்தாரர் கர்ப்பிணியாக இருப்பதினால் அங்கும் இங்கும் அலை கழிக்க நேரிடும் என்பதால் புகார் அளிக்க வில்லையாம்.

எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் மட்டுமே நடவடிக்கை என்பது கேலிக்கூத்தானது .

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 39 இன் கீழ் ஒரு குற்றம் நடைபெறுவது குறித்து பொது மக்களுக்கு தெரிய வந்தால் தகவல் அளிப்பது அவர்களின் கடமை.

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(ஈ) இன் கீழ் வாய் மொழியாக அளிக்கும் புகாரினையும் பதிவு செய்ய வேண்டும்.

என்ன நடக்கும்.?

செவிலியர் ரம்யா லஞ்சம் கேட்டதை ஒப்பு கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது .

இதனை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றால் பணி இட மாற்றம் செய்யக்கூடும்.

லஞ்சம் வாங்கி தின்ற ஊழியர்கள் தண்டிக்கப்பட போவதில்லை.

*கோரிக்கை*

1. *லஞ்சம் வாங்க தூண்டிய ஊழியர்களும் கர்ப்பிணி பெண்களிடம் லஞ்சம் பெற்று வயிறு வளர்த்த ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்*

2 *முகாமில் பெற்ற லஞ்சப்பணம் முழுவதும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் திருப்பி வழங்கப்பட வேண்டும்*

3: *திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுகாதார ஊழியர்களை*
*கண்காணிக்க நேர்மையான அலுவலர்களை நியமிக்க வேண்டும்*

4. *திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் லஞ்சம் வாங்கும் கேடு கெட்ட அரசூழியர்களை தீவிரமாக  கண்காணித்து வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும்*
💥💥💥💥💥💥💥💥💥💥💥
*நாஞ்சில் கோ.கிருஷ்ணன்*
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர் மாவட்டம்.
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .....🙏
இணைப்பு : லஞ்சம் வாங்கிய காணொளி.

No comments:

Post a Comment