Friday 21 September 2018

என்னங்க சார் உங்க சட்டம்?

பத்திரிக்கை செய்தி.
21.09.2018

லஞ்சம் ஊழலுக்கு எதிராக திருப்பூரில் இருந்து தலைநகர்  சென்னையை நோக்கி  பயணம்!

அன்புடன் அழைக்கின்றோம்.

என்னங்க சார் உங்க சட்டம்?

அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் 23 செப்டம்பர் 2018 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற இருக்கும் மாபெரும் மக்கள் சந்திப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு (LAACO)   சார்பாகவும் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு (FACT INDIA) சார்பாகவும்  சமூக அக்கறை உள்ள சமூக ஆர்வலர்கள் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் இருந்து 22.09.2018 இரவு 9.00 மணி அளவில் பறப்பட இருக்கிறோம்.

திருப்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஏன்?  எதற்காக இந்த மக்கள் சந்திப்பு?

லஞ்சம் ஊழலை  ஒழிப்பது யார்?

ஊழல்வாதிகள் எப்படி இவ்வளவு தைரியமாக ஊழல் செய்கிறார்கள்?

எவ்வளவு ஊழல் செய்தாலும் தண்டனையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம் என்கிற தைரியம்.

இந்த தைரியத்திற்கு காரணம் என்ன?
வலுவில்லாத ஊழல் ஒழிப்புச் சட்டங்கள்.

ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மட்டும் வலுவாக இருந்திருந்தால் இந்நேரம் பலர் பதவியில் இல்லாமல் தண்டனையில் இருந்திருப்பர்.

ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.

திட்டமிட்டு ஊழல் செய்பவர்களை அதை விட புத்திசாலித்தனமாக தகர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சட்டங்களை நமது அரசுகள் இயற்ற வேண்டும்.

ஆனால் அதிர்ச்சி என்னவென்றால், நமது மத்திய மாநில அரசுகள், இருக்கும் சட்டங்களை இன்னும் பலவீனமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் எவ்வளவு கொடூரமானது என்றால் இந்த சட்டங்களை இனி நாம் ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் என்றே சொல்ல முடியாது.

ஊழல் வளர்ப்பு சட்டங்கள் அல்லது ஊழல்வாதிகள் பாதுகாப்பு சட்டங்கள் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு மோசமான திரிக்கப்பட்டிருக்கின்றன.

நமது நாடு சுதந்திரம் அடைந்த பின் இன்று வரையிலும் பல்வேறு வகையான பல இலட்சம் கோடி ஊழல் முறைகேடுகள் தினம் தினம் நடை பெற்று வருகிறது.

இதனை தடுக்க வேண்டிய மத்திய மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகங்களால் எந்த ஊழலையும் கண்காணித்து தடுக்க முடிய வில்லையே ஏன்?

லஞ்ச ஒழிப்பு அமைப்புகளை ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாத  அனைத்து அதிகாரங்களும் கொண்ட தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்.

நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்காத நாமும் இதற்கு முழு காரணம்.

இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடம் , ஏன் ஊடகங்களிடமுமே கூட மிக குறைவாக இருக்கிறது.

அறப்போர் இயக்கம், இதைப்பற்றிய விழிப்புணர்வுக்காக வரும் செப்டம்பர் 23 அன்று சென்னையில் 'என்னங்க சார் உங்க சட்டம்'? என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள்  பொது மக்கள் சந்திப்பு நிகழ்த்த உள்ளது.

ஊழல் ஒழிப்பை மக்களைத் தவிர வேறு யாரும் உண்மையாக முன்னெடுக்க முடியாது.

நாம் இல்லை என்றால் வேறு யார்?

இப்போது இல்லை என்றால் வேறு எப்போது?

லஞ்சம் ஊழலுக்கு எதிராக ஒன்று கூடுவோம் வாருங்கள்.

No comments:

Post a Comment