Tuesday 2 May 2017

செயல் படாத தமிழக தகவல் ஆணையம்! கடமை தவறிய மாநில தகவல் ஆணையர்கள்!! பாதிக்கப்படும் பொது மக்கள்!!!


#செயல் படாத தமிழக தகவல் ஆணையம்!
#கடமை தவறிய மாநில தகவல் ஆணையர்கள்!!
#பாதிக்கப்படும் பொது மக்கள்!!!

★தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
******************************************
15.06.2005 ஆம் ஆண்டு மேதகு குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு 12.10.2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் (காஷ்மீர் நீங்கலாக)  இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

★இச்சட்டத்தின் நோக்கம் :
*******************************************
★அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் பாட்டிலும்  வெளிப்படையான  ஒளிவு மறைவற்ற நிலையை கொண்டு வருதல் .

★அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணி புரிபவர்களுடைய பொறுப்புடமையை மேம்படுத்துதல்.

★அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களை பெற விரும்பும் குடி மக்களுக்கு அதை அளிக்க வகை செய்வதோடு லஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்.

★மாநில தகவல் ஆணையம் :
*******************************************
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 15 -ன் படியும், அரசு ஆணை ( நிலை)  எண் :988 பொதுத்துறை நாள் :07.10.2005. ன் படியும் "மாநில தகவல் ஆணையம் "  செயல்பட்டு வருகிறது.

★மாநில தகவல் ஆணையர்கள் நியமனம் :
*******************************************
இந்த ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் உட்பட பத்துக்கும் மேற்படாத தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மாநில முதல்வர் , முதல்வரால் நியமிக்கப்படும் அமைச்சர், மற்றும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவரின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்பட வேண்டும்.

★பொது தகவல் அலுவலர்கள் :
*******************************************
இச்சட்டப்பிரிவு 5 (1)  ன் படி அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் ஒரு பொது தகவல் அளிக்கும் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

★என்னென்ன தகவல்கள் பெறலாம்?
*******************************************
இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்ககூடும் அல்லது வள ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் எனக்கருதும் தகவல்களை கேட்க கூடாது.

பொது மக்கள் தங்களுக்கு தேவை என கருதும் தகவல்களை அந்தந்த துறையை சேர்ந்த பொதுதகவல் அலுவலருக்கு சட்டப்பிரிவு 6 (1)  ன்கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 7 (1)  ன் கீழ் பொது தகவல் அலுவலர் 30 தினங்களுக்குள் தகவல்  வழங்க வேண்டும்.

சட்டப்பிரிவு 6 (2)  ன் படி தகவல் கோருவதற்கான காரணங்களை பொது தகவல் அலுவலர் கேட்கக்கூடாது.

தகவல் மறுக்கப்படும் போது சட்டப்பிரிவு 4 (1) d ன் படி அதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

சட்டப்பிரிவு 7 (3) a ன் படி ஆவண நகல்களுக்கான கட்டண விபரங்களை தனித்தனியாக குறிப்பிட்டு எந்த கணக்கில் எவ்வாறு செலுத்த வேண்டும் என பொது தகவல் அலுவலர் தெரிவிக்க வேண்டும்

★விண்ணப்ப கட்டணம் :
*******************************************
₹ 10 ரூபாய் பணமாகவோ, நீதிமன்ற வில்லையாகவோ, வங்கி வரையோலையாகவோ, கருவூல செலுத்து சீட்டு மூலமாகவோ செலுத்தலாம்.

வறுமை கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

★முதல் மேல் முறையீடு :
*******************************************
30 தினங்களுக்குள்  பொது தகவல் அலுவலர் தகவல் வழங்க வில்லை என்றாலோ அல்லது குறைபாடான தவறான தகவல் வழங்கினாலோ சட்டப்பிரிவு 19 (1)  ன் கீழ் அந்தந்த துறையின்  மேல் முறையீட்டு அலுவலருக்கு முதல் மேல் முறையீடு செய்ய வேண்டும்.

முதல் மேல் முறையீட்டு அலுவலர் 30 தினங்களுக்குள் தகவல் வழங்க வேண்டும் .

★இரண்டாவது மேல் முறையீடு :
*******************************************
முதல்  மேல் முறையீட்டு அலுவலரும் 30 தினங்களுக்குள் தகவல் வழங்கா விட்டாலோ அல்லது தவறான தகவல் வழங்கினாலோ  சட்டப்பிரிவு 19 (3)  ன் மாநில தகவல் ஆணையருக்கு இரண்டாவது மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பொது தகவல் அலுவலருக்கு தகவல் கோரிய நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்ய வேண்டும்.

இரண்டாவது மேல் முறையீட்டினை பெற்ற தகவல் ஆணையம் ஒவ்வொரு முறையீட்டிற்கும் வழக்கு எண் இட வேண்டும்.

இரண்டாம் மேல் முறையீட்டினை பரிசீலனை செய்த மாநில தகவல் ஆணையர் தகவல் வழங்க பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிடவோ
அல்லது மனுதாரருக்கும் பொது தகவல் அலுவலருக்கும் அழைப்பானை அனுப்பி நேரில் விசாரணை செய்து உரிய தகவல் பெற்று தர வேண்டும்.

மேலும், ஆவண நகல்களை சட்டப்பிரிவு 7 (6)  ன் படி இலவசமாக வழங்க பொதுதகவல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்.

★அபராதம் மற்றும் தண்டனைகள் :
*******************************************
சட்டப்பிரிவு 7 (1)  ன் கீழ் 30 தினங்களுக்குள் தகவல் வழங்காத கடமை தவறிய பொது தகவல் அலுவலருக்கு நாள் ஒன்றுக்கு ₹ 250 ரூபாய் வீதம் அதிக பட்சம் ₹ 25000 ரூபாய் வரையிலும் சட்டப்பிரிவு 20 (1)  ன் கீழ்  அபராதம் விதித்து அந்த பணத்தினை அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

கடமை தவறிய குற்றத்திற்காக சட்டப்பிரிவு 20 (2)  ன் கீழ் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

★மனுதாரருக்கு இழப்பீடு :
*******************************************
மனுதாரருக்கு  மன உளைச்சல் மற்றும் கால நேர பொருளாதார விரையம் ஏற்படுத்திய பொது தகவல் அலுவலரிடம் இருந்து சட்டப்பிரிவு 19 (8) b ன் படி இழப்பீட்டு தொகையினை பெற்றுத்தர வேண்டும்.

இது தான் தனி மனித சுதந்திர சட்டமான "தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 "

ஆனால் அரசுத்துறைகளில் உள்ள பொது தகவல் அலுவலர்கள் இந்த சட்டத்தினை மதிப்பதே இல்லை.

சரியான தகவல் வழங்காமல் மனுதாரர்களை அலைகழித்து வருகிறார்கள்.

கடமை தவறிய பொது தகவல் அலுவலர்கள் மற்றும் முதல் மேல்முறையீட்டு அலுவலர்கள்.!

இவர்களை கண்காணித்து இரண்டாவது மேல் முறையீடுகளின் மீது உரிய விசாரணை செய்து மனுதாரர்களுக்கு தகவல் பெற்று தர வேண்டிய தகவல் ஆணையர்கள் சர்வாதிகாரிகளைப் போல் செயல் படுகிறார்கள்.

தகவல் ஆணையம் தறி கெட்ட ஆணையமாக மாறி விட்டது.

கடமை தவறிய பொது தகவல் அலுவலர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படாத காரணத்தினால் அரசுக்கு பல கோடி இழப்பீடு ஏற்படுத்தி வருகிறார்கள்.

துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும் தயங்குகிறார்கள்.

எனவே கடமை தவறிய பொது தகவல் அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையம் மீது பயம் இல்லாமல் போய்விட்டது.

இதன் காரணமாக இச்சட்டம் நீர்த்து போக செய்யப்பட்டு வருவது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தகவல் ஆணைய மேல் முறையீட்டு விதிகளில் திருத்தம் செய்து மனுதாரர்களுக்கும், தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கும் எதிராக செயல் பட்டு வருகிறார்கள்.

ஏழு ஆணைய பணி இடங்களில் தற்பொழுது நான்கு ஆணையர்களே பணியில் உள்ளனர்.

சட்டப்பிரிவு 4(1) அ வின் படி அனைத்து அரசுத்துறைகளும் அந்தந்த துறைகளின் செயல் பாடுகளையும், அரசாணைகளையும் ஆண்டு தோறும் பொது மக்கள் தெரியும் வண்ணம் எந்த முறையில் தெரிவித்தால் பயன் பெற கூடுமோ அல்லது  வலை தளங்கள் மூலம் வெளியிட  வேண்டும்.

ஆனால் இதனை எந்தத்துறையும் நடை முறை படுத்த வில்லை

# தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம் உங்கள் பார்வைக்கு :
*******************************************
21.04.2015 அன்று சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு திருப்பூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் அவர்கள் சார்பில் மாநில தகவல் ஆணைய பொது தகவல் அலுவலருக்கு சில தகவல்கள் கோரப்பட்டது.

ஆனால் 30 தினங்களுக்குள் பதில் வழங்கவில்லை.

முதல் மேல் முறையீடு செய்த பின் வழங்கிய பதில் வியப்பில் ஆழ்த்தியது.

கேள்வி :
தற்பொழுது பதவியில் உள்ள தகவல் ஆணையர்களின் பெயர், கல்வி தகுதி,பணியில் சேர்ந்தநாள், பணி ஓய்வு பெறும் நாள், பணி நேரம்,  மாதஊதியம், பற்றிய முழுமையான தகவல்கள் வழங்கவும்.

பதில் :
www.tnsic.gov.in என்ற ஆணைய வலைதளத்தினை பார்க்கவும்.

கேள்வி :
தகவல் ஆணையத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், பணியாளர்களின் பெயர், பதவியின் பெயர் கல்வி தகுதி, மாத ஊதியம் பற்றிய முழுமையான தகவல் வழங்கவும்.

பதில் :
www.tnsic.gov.in என்ற ஆணைய வலை தளத்தை பார்க்கவும்.

ஆனால் இந்த தகவல்கள் மேற்காண் வலைதளத்தில் இல்லை.

கேள்வி :
தங்கள் அலுவலக கடமை தவறிய பொது தகவல் அலுவலருக்கு நுகர்வோர் நீதிமன்றம் எந்த ஆண்டு எவவளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது,

அந்த தொகை எந்த தேதியில் எந்த கணக்கில் இருந்து யாருடைய பணத்தில் இருந்து வழங்கப்பட்டது.

அவ்வாறு அபராத தொகை வழங்கப்பட வில்லை எனில் அதற்கான காரணங்களை சட்டப்பிரிவு 4 (1) d ன்படி தெரிவிக்கவும்.

பதில் :
இல்லை. கேள்வி எழாது.

(நுகர்வோர் நீதிமன்றம் மாநில தகவல் ஆணைய பொது தகவல் அலுவலருக்கு ₹ 5000 ரூபாய் அபராதம் விதித்தது .
ஆனால் இல்லை என தகவல் மறுக்கப்பட்டுள்ளது.)

கேள்வி :
தற்பொழுது தகவல் ஆணையர்கள் பதவி ஏற்ற நாள் முதல் இன்றைய தேதி வரையிலும் கடமை தவறிய எந்தெந்த துறை பொது தகவல் அலுவலர்களுக்கு எவ்வளவு ரூபாய் அபராதம் எந்தெந்த தேதிகளில் விதிக்கப்பட்டுள்ளது அவர்களின் பெயர் மற்றும் வழக்கு எண் பற்றிய தகவல் வழங்கவும்.

பதில் :
தொகுத்து வைக்கப்படவில்லை.

கேள்வி :
தற்போதைய தலைமை தகவல் ஆணையர் பதவி ஏற்றது முதல் இன்றைய தேதி வரையிலும் தகவல் ஆணையத்திற்கு வரப்பெற்ற இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் மொத்தம் எத்தனை?

இதில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை?

தள்ளுபடி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை?

வழக்கு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை,?

நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் எத்தனை?

பதில் :
தொகுத்து வைக்கப்படவில்லை.

தகவல் ஆணையர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எந்தெந்த மனுதாரர்கள் மீது காவல் நிலையத்தில் எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வழங்கவும்.

பதில் :
மூன்றாம் நபர் குறித்த தகவல் வழங்க இயலாது.

கேள்வி :
தகவல் ஆணையர்களுக்கு சுழல் விளக்கு பொறுத்திய வாகனங்களில் பயணிக்க அனுமதி உள்ளதா என்ற தகவல் வழங்கவும்.

பதில் :
மாநில தகவல் ஆணையர்கள் தலைமை செயலாளர் அந்தஸ்து பெற்றுள்ளதால் அவ்வாறு பயணிக்கலாம்.

கேள்வி :
சட்டப்பிரிவு 7 (1)  ன் கீழ் 48 மணி நேரத்தில் ஒரு பொது அதிகார அமைப்பிடம் தகவல் கோரிய மனுதாரருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனில் முதல் மேல்முறையீடு மற்றும் இரண்டாம் மேல் முறையீடு எவ்வளவு மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும் என்ற தகவல் வழங்கவும்

பதில் :
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை படித்து பார்க்கவும்.

கேள்வி :
இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பம் மனுதாரரிடம் இருந்து பெறப்பட்டு எவ்வளவு நாட்களுக்குள் விசாரணை செய்து வழக்கு முடிக்கப்பட வேண்டும் என்ற,  அரசாணையின் ஒளி
நகல் வழங்கவும்.

பதில் :
காலவரையறை ஏதுமில்லை.

இரண்டாவது மேல் முறையீடு செய்த பின் இன்று வரையிலும் வழக்கு விசாரணைக்கு  வரவில்லை.

மாநில தகவல் ஆணையமே தகவல்களை தொகுத்து வைக்க வில்லை என கூறியிருப்பது எவ்வளவு வெக்க கேடான செயல்.

இவ்வாறான கேடு கெட்ட சட்டத்திற்கு எதிரான தகவல்களை வழங்குவது மாநில தகவல் ஆணையம்  செயல் பட வில்லை என்பது நிதர்சனமான உண்மை.

இந்த கடமை தவறிய தகவல் ஆணையர்களால் மனுதாரர்களுக்கு எந்த பயனும் இல்லை.

இதற்கெல்லாம் மூல காரணம் நமது ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமான ஆணையர்களை  பதவியில் வைத்திருப்பது தான்.

இந்த நிலை மாற வேண்டுமானால் மக்கள் நேர்மையான ஆட்சியா
ளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் .-641 652
உலா பேசி :98655 90723

No comments:

Post a Comment