Monday 31 December 2018

2019 ஆம் ஆண்டு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


"2019  ஆம் ஆண்டு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள், "

2020 இல்  இந்தியா வல்லரசாக வேண்டும் என விசன் 2020 கலாம் அவர்களின் கனவு மெய்ப்பட இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ளது.

கிறிஸ்துவிற்கு பிறகு 20 நூற்றாண்டுகளை கடந்து  21 ஆம் நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

பூமி தங்கு தடையின்றி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றி சுழல்வதன் மூலம் ஆண்டுகள் பல உருண்டோடி கொண்டிருக்கிறது.

நேற்று இருந்தவர் இன்று இல்லை!
இன்று இருப்பவர் நாளை இல்லை!

பிறப்பும் இறப்பும் தொடர்கிறது
மனித வாழ்க்கையின் நியதி இது தான்

மனித வாழ்வின்  காலம் குறுகியது என்ற சூட்சுமத்தினை உணர்ந்தவர்கள் நீதிமானாக வாழ்கிறார்கள்.

இந்த இனிய நாளில்  நம் இந்திய தேசத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும்,

ஜாதி
மதம்
இனம்
மொழி
பாகு பாடில்லாமல்
சகோதர ஒற்றுமையுடன்
எல்லா வளமும் நலமும்
பெற்று  சிறப்புடன் வாழவும்,

நமது இந்தியத்திருநாட்டில்
பஞ்சம்,
பசி
பட்டினி
பொறாமை
வறுமை
லஞ்சம்
ஊழல்
ஒழிந்திடவும்,

விவசாயம் செழித்திடவும்,
பொருளாதாரம் உயர்ந்திடவும்,
இயற்கை சீற்றங்களில் இருந்து
உரிய பாதுகாப்பு  கிடைத்திடவும்,

அரசியலமைப்பு சாசனப்படி  அனைவருக்கும் அனைத்து  உரிமைகள் கிடைத்திடவும், 

நமது இந்திய தேசத்தை லஞ்சம் ஊழல் இல்லா வல்லரசு நாடாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரும் கடமை உணர்வுடன் சிறப்புடன்  செயல் படவும்,

லஞ்சம் வாங்கும் கேடு கெட்டவர்கள் முற்றிலும் ஒழிந்திடவும்

சட்ட விழிப்புணர்வு மற்றும்
ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பாக பல சட்ட விழிப்பறிவுணர்வு பயிற்சி முகாம்களை இலவசமாக நடத்தி வருவதுடன்  சமூக வலைதளங்கள் மூலம் பல சட்ட  விழிப்புணர்வு தகவல்களை அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51 A (அ) மற்றும் (ஓ) இன் கீழ் எங்கள் கடமையாக கொண்டு சிறப்புடன் ஆற்றி வருவதில் பெருமிதம் கொள்கிறோம்.

எங்கள் தொடர்  பயணத்தில் பங்கு எடுத்துள்ள எனதருமை நண்பர்கள் மற்றும் எங்களின் வாட்ஸ்ஆப் குரூப் நண்பர்கள்

1."LAACO Anti -Corruption"
நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்

2.."LAACO MEMBERS GROUP"
உறுப்பினர்கள்

3." சமூக ஆர்வலர்கள் சங்கமம் "
அனைத்து சமூக ஆர்வலர்கள்

4." தனியார் பள்ளி கல்வி  புகார்"
பெற்றோர்கள்

5. " TIRUPUR PRESS. GROUP "
பத்திரிக்கை தொலைகாட்சி நண்பர்கள்

6." அரசு அலுவலர்கள் கவனத்திற்கு" அரசுத்துறைகளை சார்ந்த அலுவலர்கள்

7." அரசு கேபிள் டி.வி புகார் "
அரசு கேபிள் சந்தாதாரர்கள்

8." நல்லாறு பாதுகாப்புக்குழு "
இயற்கை ஆர்வலர்கள்

9."A TEAM OF FACT INDIA "
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநில  நிர்வாகிகள் 'பொறுப்பாளர்கள்

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு முகநூல் பொது நலகுரூப் உறுப்பினர்கள்

அரசுத்துறைகளில் இலஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணியாற்றும் அரசூழியர்கள், காவலூழியர்கள்

மற்றும் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் தன்னலம் கருதாமல் மக்கள் சேவை ஆற்றி வரும்
சமூக ஆர்வலர்கள்,
சட்ட ஆர்வலர்கள்
சமுதாய சிந்தனையாளர்கள்
சுற்று சூழல் ஆர்வலர்கள்
அனைவருக்கும் 
2019  ஆம் ஆண்டு இனிய புத்தாண்டாக அமைந்து எல்லா வளமும் நலமும் பெற்று  வாழ "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " சார்பாகவும் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பாகவும்  இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

வாழ்த்துக்களுடன் ........

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
இணை செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
இணை செயலாளர்
பேக்ட் இந்தியா
உலாபேசி ;98655 43303

Saturday 22 December 2018

ஊழல் ஒழிப்பு செய்தி;0033 அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தி வரும் கேபிள் ஆப்பரேட்டர்!

ஊழல் ஒழிப்பு சிறப்பு செய்தி :
LAACO :033/22.12.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது  என்ன?

உண்மை சம்பவம்.

அரசிற்கு ஆண்டொன்றிற்கு சுமார் ₹ 36 இலட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு!

அரசு கேபிள் இணைப்பு வழங்கியதில் பெரும் ஊழல் -முறைகேடு!

ஆண்டொன்றிற்கு சுமார் ₹ ஒரு கோடியே என்பது இலட்சம் ரூபாய் கொள்ளை லாபம் ஈட்டிய  கேபிள் ஆப்பரேட்டர்.

நடவடிக்கை எடுப்பாரா? திருப்பூர் மாவட்ட செயல்துறை நடுவர் அவர்கள்!

குற்றவாளி யார்?

அரசு கேபிள் டி.வி.ஆப்பரேட்டர்
மோகன் ராஜ்
A.M.கேபிள் நெட்வொர்க்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாவட்டம்.

பாதிக்கப்பட்ட மனுதாரரின் புகார் கடிதம்.

மனுதாரர்:
செ.ராம்குமார்
S/O, செல்லைய்யா
99,B, திலகர் நகர்              அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652.

எதிர் மனுதாரர்கள் :
01:   மோகன்ராஜ்
A.M.கேபிள் நெட்வொர்க்
LCO NO :15233
105,குமரன் வீதி     
அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652          
               
02:  பொ.ஜெய்சிங்
தனி வட்டாட்சியர்/
மாவட்ட துணை மேலாளர்
தமிழ்நாடு அரசு கேபிள்  டி வி நிறுவனம்
திருப்பூர் மாவட்டம்

03: நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள்
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் அலுவலகம்,
மாவட்ட. ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :
மேலாண்மை இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. கார்ப்பரேசன்,
துகர் டவர்ஸ், 34,(123) 6வது தளம்,
மார்சல் ரோடு, எழும்பூர்,
சென்னை - 600 008.

அய்யா,

பொருள் : அரசு கேபிள் டி.வி  இணைப்பினை துண்டித்ததுடன் கூடுதல் கட்டணம் வசூலித்தும் இலவச செட்டா பாக்ஸ் இணைப்பு வழங்க மறுத்து வரும் ஏதிர்மனுதாரர் :01 என்பவர் மீதும் அரசு கேபிள் டிவி கணக்கில் செலுத்திய ₹.140.00 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை அரசு கணக்கில் செலுத்தாமல் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதுடன் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :01 என்பவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய எதிர்மனுதாரர் :02 என்பவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு கேபிள் இணைப்பினை வழங்க உத்தரவிடாமல் நுகர்வோராகிய எனக்கு மன உளைச்சலும் சேவை குறைபாடும் ஏற்படுத்தி உள்ள எதிர்மனுதாரர் :03 என்பவர் மீதும் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் முறையீடு,

பார்வை :
01. மாத சந்தா செலுத்தியதற்கான அட்டையின் நகல்

02. எனது புகார் கடிதம் நாள்:  01-02-2018

03.எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் இருந்து வந்த பதில் கடிதம்  ந.க.எண் :45/2017,TACTV /TUP.நாள் :12-03-2018.

04. வங்கி வரைவோலை நாள் :26-03-2018 மற்றும் புகார் கடித நாள் :31-03-2018

05.எதிர் மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க .எண் :45/2017/TACTV /TUP. நாள் :04-04-2018.

06.எதிர்மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க.எண் :45/2017,TACTV / TUP.நாள் :10-04-2018

07.எதிர்மனுதாரர் :03என்பவருக்கு குறைதீர்க்கும் நாளில் நேரில் கொடுத்த எனது புகார் மனு நாள் : 07-05-2018.

08.எதிர்மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க. எண் :45/2017,TACTV /TUP.
நாள் :07-05-2018.

09: எதிர்மனுதாரர் :03 என்பவரிடம் கொடுத்த புகார் மனுவிற்கு சார் ஆட்சியரிடம் இருந்து வந்த விசாரணை அழைப்பாணை கடிதம் நாள் 17-07-2018.

10.அம்மா அழைப்பு மைய புகார் எண் :18082900292.

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் எதிர்மனுதாரர் :01 என்பவரிடம் இருந்து வைப்பு தொகை செலுத்தி அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளேன்.

எனவே நான் ஒரு நுகர்வோர் ஆவேன்.

எதிர்மனுதாரர் :01.மோகன்ராஜ் என்பவர் LCO :15233 அரசு கேபிள் டி.வி உரிமம் பெற்றுள்ள கேபிள் டி.வி ஆப்பரேட்டர் ஆவார்.

எதிர்மனுதாரர் :01என்பரிடம் எனது வீட்டிற்கும், சலூன் கடைக்கும் சேர்ந்து இரண்டு அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றுள்ளேன்.

பல ஆண்டுகளாக 01. எதிர்மனுதாரரிடம் கேபிள் இணைப்பு பெற்று மாத சந்தா செலுத்தி வருகிறேன்.

அரசு நிர்ணயம் செய்துள்ள மாத சந்தா  ₹ 70.00 ரூபாயினை பெறாமல் ₹100 ரூபாய் மாதசந்தா கூடுதலாக வசூலித்து வருகிறார்.
   
இந்நிலையில் எதிர்மனுதாரர் 01: என்பவரிடம் அரசு இலவச செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்க கோரினேன்.

ஆனால் அவர் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க இயலாது என்றும் தனியார் செட்டாபாக்ஸ் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் பார்வை :02 காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பினேன். எதிர்மனுதாரர் :02 என்பவர் பார்வை :03இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்மனுதாரர் :01 என்பவர் எனது இரு கேபிள் இணைப்புகளையும் துண்டித்துவிட்டார்.

மாத சந்தா தொகையினையும் பெற மறுத்த காரணத்தினால் பார்வை :04 ல் காணும் வங்கி வரை வோலையை எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பினேன்.

பார்வை: 05 இல் காணும் கடிதத்தின் படி எதிர்மனுதாரர் :01என்பவருக்கு எதிர்மனுதாரர் :02 என்பவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆனால் நான் விசாரணைக்கு சென்ற போது எதிர்மனுதாரர் :01 என்பர் விசாரணைக்கு வரவில்லை.

துண்டிக்கப்பட்ட எனது வீட்டு கேபிள் இணைப்பினை எதிர்மனுதாரர் :01 என்பவர் மீண்டும் வழங்கினார்.

இந்த நிலையில் பார்வை :04 ல் காணும்  எனது வங்கி வரை வோலையை பார்வை :06 ல் காணும் கடிதம் வாயிலாக எதிர்மனுதாரர் :02 என்பவர் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

அரசு கேபிள் டிவி கணக்கில் செலுத்திய வங்கி வரைவோலை யை அரசு கணக்கில் வரவு வைக்காமல் எதிர்மனுதாரர் :02 என்பவர் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில் 02-05-2018 அன்று எதிர்மனுதாரர் :01 என்பவர் எனது வீடு மற்றும் கடை கேபிள் இணைப்பினை மீண்டும் துண்டித்து விட்டார்.

எனவே, எதிர்மனுதாரர் :02 என்பவரின் கைபேசிக்கு அழைத்து புகார் தெரிவித்தேன்.

எதிர்மனுதாரர் :02 என்பவர் 03-05-2018 அன்று மதியம் 3.00 மணிக்கு கேபிள் டிவி அலுவலகத்திற்கு நேரில் வர சொன்னார்கள்.

நான் நேரில் சென்றபோது எதிர்மனுதாரர் :01 என்பவர் விசாரணைக்கு வர வில்லை

எதிர்மனுதாரர்: 01 என்பவரை நேரில் சென்று சந்திக்கும்படி  எதிர்மனுதாரர் 02

என்பவர் தெரிவித்தார்கள். எனவே எதிர்மனுதாரர் 01 அலுவலகம் நேரில் சென்ற போது அங்கு அவர் இல்லை.

இந்நிலையில் 04.05.2018 அன்று எதிர்மனுதாரர் : 02 என்பவர் என்னை சந்திக்க வந்தார்.

எதிர்மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பிய வங்கி வரைவோலையை எதிர்மனுதாரர் : 01 என்பவருக்கு தெரியாமல் அனுப்பி விட்டதாக எதிர்மனுதாரர் : 02 என்பவர் தெரிவித்தார்.

இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான நான் பார்வை : 07 ல் காணும் புகார் கடிதத்தினை குறைதீர்க்கும் நாளில் எதிர்மனுதாரர் : 03 என்பவரிடம் நேரில் கொடுத்தேன்.

இந்நிலையில் துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பிணை எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீண்டும் வழங்கினார்.

பார்வை : 08 ல் காணும் கடிதம் எதிர்மனுதாரர் : 02 என்பவரிடம் இருந்து வரப்பெற்றது.

எதிர்மனுதாரர் : 03 என்பவரிடம்  கொடுத்த புகார்மனு மீது விசாரணை செய்வதற்காக பார்வை : 09 இல் காணும் கடிதம் சார் ஆட்சியரிடம் இருந்து வரப் பெற்றது.

31.07.2018 அன்று விசாரணைக்கு நேரில் சென்று இருந்தேன்,அங்கு சார் ஆட்சியர் விசாரணை செய்யவில்லை.அவரது உதவியாளர் விசாரணை செய்தார்கள். எதிர்மனுதாரர் : 01 என்பவரும் எதிர்மனுதாரர் : 02 என்பவரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை.

விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவதாக தெரிவித்தார்கள்.

விசாரணை திருப்தி அளிக்கவில்லை

இந்நிலையில் 29.08.2018 அன்று மீண்டும் எனது கடையின் கேபிள் இணைப்பினை எதிர்மனுதாரர் : 01 என்பவர் துண்டித்துவிட்டார்.

எனவே எதிர்மனுதாரர் : 02 என்பவரை கைபேசியில் அழைத்து புகார் தெரிவித்தேன்.

அவர் எதிர்மனுதாரர் : 01 என்பவரிடம் பேசும்படி தெரிவித்தார்.

எதிர்மனுதாரர் : 01 என்பவர் மாத சந்தா தொகை 100 ரூபாய் வீதம் செலுத்தினால் மட்டும் தான் இணைப்பு வழங்குவேன் என தெரிவித்தார்.

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக எனது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் நுகர்வோராகிய என்னை அங்கும் இங்கும் அலைகழித்து மிகுந்த மன உளைச்சலினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

எதிர்மனுதாரர் : 02 என்பவரின் உத்தரவினை எதிர்மனுதாரர் : 01 என்பவர் கேட்க மறுக்கிறார்.

எதிர்மனுதாரர் : 03 என்பவரிடம் கொடுத்த எனது புகாரின் விசாரணை நிலுவையில் இருக்கும் காரணத்தினால் எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீண்டும் மீண்டும் எனது கேபிள் இணைப்பினை துண்டித்த வண்ணம் இருக்கிறார்.

பார்வை : 10 இல் காணும் அம்மா அழைப்பு மையத்திலும் புகார் அளித்துள்ளேன்.

எனவே தாங்கள் எனது புகார் மனு மீது உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு  மாத சந்தா 70.00 ரூபாய்க்கு கேபிள் இணைப்பு வழங்கவும் ,அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்கவும் சட்ட விரோதமாக செயல்பட்டுவரும் எதிர்மனுதாரர் : 01 என்பவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும்,கடமை தவறிய எதிர்மனுதாரர் : 02 என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்,எனது புகாரினை கால தாமத படுத்தும் எதிர்மனுதாரர் : 03, என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் இந்த புகார் மனு தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் :23

நாள்  : 13.09.2018                                              
இடம் : திருப்பூர்.

மாவட்ட துணை மேலாளரின் கடிதம் :

1100 அம்மா அழைப்பு மையத்தில் அளித்த  புகார் மீது நடவடிக்கை!!

சபாஷ்!!

திருப்பூர் மாவட்ட அரசு கேபிள் டி.வி துணை மேலாளர் /தனி வட்டாட்சியர் பொ.ஜெய்சிங் அவர்களின் இறுதி எச்சரிக்கை!!

அரசு இலவச செட்டாபாக்ஸ் மூன்று தினங்களுக்குள் புகார் தெரிவித்த ராம்குமார் என்ற சந்தாதாரருக்கு வழங்கப்பட வில்லை எனில் திருப்பூர் அனுப்பர்பாளையம் A.M.கேபிள் நெட்வொர்க் கேபிள் டி.வி  உரிமத்தினை ரத்து செய்து புதிய ஆப்பரேட்டரை நியமனம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்கள்.
வாழ்த்துக்கள்.

அனுப்புநர் :
திரு.பொ.ஜெய்சிங்
தனி வட்டாட்சியர் துணை மேலாளர்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம்
திருப்பூர்

பெறுநர் :
திரு.மோகன்ராஜ்
A.M.கேபிள் நெட் வொர்க்
105 ,குமரன் வீதி
அனுப்பர்பாளையம்
திருப்பூர் .

ந.க.எண் :47/2018/TACTV.TUP : நாள் :21.12.2018

அய்யா,

பொருள் : புகார் மனு அம்மா தொலைபேசி மையம் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் திருப்பூர் மாவட்டம் -திருப்பூர் வடக்கு வட்டம் -திரு. ராம் குமார் என்பவர் அரசு செட்டாபாக்ஸ் கேட்டு மனு தொடர்பாக,

பார்வை :அம்மா அழைப்பு மையம் Ref No: 18102200349 ,1811010 0187
நாள் :22.03.2018

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் டவுண் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த திரு.ராம்குமார் என்பவர் அரசு கேபிள் டி.வி. செட்டாபாக்ஸ் வழங்க கேட்டு நேரிலும் அரசு அதிகாரிகள் மூலம் பல முறை முறையிட்டும்  மனு செய்தும் இன்று வரை தனக்கு அரசு கேபிள் டி.வி. செட்டாபாக்ஸ்  வழங்க வில்லை என்றும் அனலாக் முறை நிறுத்தப்பட்டு விட்ட  நிலையில் செட்டாபாக்ஸ் வழங்கப்படாத தால் தனக்கு ஏற்பட்டுள்ள மன சிரமங்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர் தான் காரணம் என்றும் அம்மா அழை பேசி மையத்தில் மனு செய்துள்ளார்.

இது தொடர்பாக உங்களிடம் பலமுறை தொலைபேசியில் தெரிவித்தும் கடிதங்கள் அனுப்பியும் அதிகாரிகள் உத்தரவினை அலட்சியம் செய்து வருகிறீர்கள்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து இக்கடிதம் கிடைக்கப்பெற்ற மூன்று தினங்களுக்குள் செட்டாபாக்ஸ் வழங்கப்பட வில்லை எனில் உங்களது உரிமத்தை ரத்து செய்து உங்கள் பகுதியில் புதிய ஆப்பரேட்டரை  நியமனம் செய்ய ஆவண செய்யப்படும் என்பதினை இறுதியாக. தெரிவிக்கப்படுகிறது.

துணை மேலாளர் தனி வட்டாட்சியர்
அரசு கேபிள் டி.வி
திருப்பூர்

நகல் :
1.திரு.ராம்குமார்
த/பெ. செல்லையா
99 B திலகர் நகர் மேற்கு
அனுப்பர் பாளையம்
திருப்பூர் -641 652

2.மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம்
சென்னை -அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

LAACO வின் கோரிக்கை :

1.மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர்  அரசு கேபிள் மூலம் 1010 சந்தாதாரர்களுக்கு மட்டுமே  இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் அளித்து அரசை ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

2.புதுக்காலனி, திலகர் நகர், அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம் என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கி உள்ளார்.

2. அரசு நிர்ணயம் செய்துள்ள மாத சந்தா  ₹ 70 க்கு பதிலாக ₹100 ரூபாய் சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்.

அதன் மூலம் 15000 × ₹ 100 =₹ 15,00000
மாதம் சுமார் ₹15 இலட்சம் வீதம் ஆண்டொன்றுக்கு சுமார் ₹1,80,00000
ஒரு கோடியே என்பது இலட்சம் ரூபாய்  வருமானம் ஈட்டி வருகிறார்.

3.15000 × ₹ 20 = ₹ 3,00000
மாதம் சுமார் மூன்று இலட்சம் வீதம். ஆண்டொன்றுக்கு சுமார் ₹ 36,00000 முப்பத்தாறு இலட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி வருகிறார்.

4. இன்றைய தினம் வரையிலும் 20 சந்தாதாரர்களுக்கு மட்டுமே அரசு இலவச செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்கி உள்ளார்.
அனலாக் முறை நிறுத்த பட இருப்பதால் இவர் மூலம் வழங்கப்பட்டுள்ள 20 செட்டாபாக்ஸ் மூலம் மாதம் ஒன்ற்கு 20× ₹ 62.50 = ₹ 1250 ரூபாய் மட்டுமே அரசுக்கு வருவாய்.

5.தனியார் செட்டாபாக்ஸ் இணைப்பினை கட்டாயப்படுத்தி அனைத்து சந்தாதாரர்களுக்கும் வழங்கி பல லட்சம் ரூபாய் மாதம் தோறும் கொள்ளை லாபம் ஈட்டி  வருகிறார்.

இதன் மூலம் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்.

6.அரசுக்கு ஏற்பட்டு வரும் வருவாய் இழப்பினை தடுக்கும் பொருட்டு தனி அலுவலர்களை நியமித்து மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கேபிள் இணைப்புகளையும் நேரடியாக சென்று தளஆய்வு செய்ய கோருகிறோம்.

7.அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ள அனைத்து சந்தாதாரர்களுக்கும் அரசின் இலவச செட்டாபாக்ஸ் வழங்கி அரசிற்கு வருவாய் இழப்பீடு ஏற்படாமல் தடுக்க  கோருகிறோம்.

8.சந்தாதாரருக்கு அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க பல முறை எச்சரித்தும் கடிதம் அனுப்பியும் அரசுத்துறை அலுவலரின் உத்தரவினை மதிக்காமல் சர்வாதிகாரியைப் போல் செயல் பட்டு வரும் மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் அரசிற்கு மிகுந்த அவமானம் என கருதுகிறோம்.

9.அரசை மோசடி செய்து அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பினை திட்டமிட்டு ஏற்படுத்தி வரும் மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் உரிமத்தினை உடனடியாக ரத்து செய்து குற்றவியல் வழக்கு பதிவு செய்யக்கோருகிறோம்.

10..அரசு கேபிள் உரிமத்தினை ரத்து செய்தாலும் அவருக்கு எந்த விதத்திலும் இழப்பு இல்லை.
எனவே இது நாள் வரை அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி மோசடி செய்த தொகை முழுவதினையும் அவரிடம் இருந்து அபராதத்துடன் திருப்பி வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ........!!

Monday 17 December 2018

ஊழல் ஒழிப்பு செய்தி:0032 அரசு பள்ளி மாணவனை கடித்து குதறிய தெரு /வெறி நாய்!

ஊழல் ஒழிப்பு செய்தி :
LAACO ; 0032 /19.12.2018

குற்றம் நடந்தது என்ன?

நெஞ்சை பதற வைத்த
உண்மை சம்பவம்!

அரசு பள்ளி மாணவனை கடித்து குதறிய தெரு நாய் /வெறி நாய்.

குற்றவாளிகள் யார்? யார்?

1.ஆபத்துக்கு அவசர சிகிச்சை அளிக்க தவறிய திருப்பூர் 4.வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

2.தெரு நாய் /வெறி நாய்களிடமிருந்து திருப்பூர் மாநகர மக்களை பாதுகாக்க தவறிய திருப்பூர் மாநகராட்சி சுகாதாரத்துறை.

3.மாநகராட்சி உரிமம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சுகாதார சான்று பெறாமல்  சட்ட விரோதமாக செயல் படும் நியூ மதினா மட்டன் சிக்கன் ஸ்டால்.

குற்றம் நடந்த இடம் திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை நியூ மதினா மட்டன் சிக்கன் ஸ்டால்.

திருப்பூர் அங்கேரிபாளையம் ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த முருகேசன் பரிமளா ஏழை கூலி தொழிலாளியின் மகன் 14 வயதான பால கிருஷ்ணன் .

இவர் அங்கேரிபாளையம் V.K. அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில் 16.12.2018 அன்று காலை 7.00 மணி அளவில் தனது சக நண்பர்கள் இருவருடன் அனுப்பர்பாளையம் வார சந்தையில் பொருட்கள் வாங்குவதற்காக அவரது வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கேரிபாளையம் சாலையில் செயல் பட்டு வரும் நியூ மதினா மட்டன் சிக்கன் கடையின் முன்புறம் இருந்து ஆவேசமாக பாய்ந்து வந்த இரு நாய்களில் ஒன்று மாணவனின் தொடையை கடித்து குதறியது.

இரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த மாணவனை சக நண்பர்கள் நாயிடம் இருந்து மீட்டு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் கேட்டு பதறி அடித்து ஓடி வந்த பெற்றோர் கால்களில் இருந்து இரத்தம் வடிந்து வலியால் துடித்து கொண்டிருந்த மகனை தூக்கி கொண்டு உடனடியாக  4.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவரும் இல்லை .செவிலியரும் இல்லை.
அங்கிருந்த இளம் பெண்ணிடம் சிகிச்சை அளிக்கும் படி வேண்டியுள்ளனர்.

மருத்துவர் 10 மணிக்கு தான் வருவார்.
நாய்கடிக்கான. ஊசி மருந்து  ஒருவருக்கு போட முடியாது. ஐந்து நபர் நாய்கடிபட்டு வந்தால்  தான் போட முடியும் எனவே 10 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பியுள்ளார்.

இரத்தம் சொட்ட சொட்ட வந்த மாணவனுக்கு முதல் உதவி சிகிச்சை கூட அளிக்காமல் திருப்பி அனுப்பியது பெற்றோருக்கு மிகுந்த அதிர்ச்சியும் மன வருத்தமும் ஏற்பட்டுள்ளது.

நாயின் கூரிய பற்கள் தொடை பகுதியில் ஆழமாக சதையை துளைத்து
இரத்தம் நிற்காமல் வெளியேறி கொண்டிருந்ததினால் கடித்த நாய் ரேபிஸ் போன்ற வெறி நாயாக இருந்தால் என்ன செய்வது என  பதட்டமடைந்த பெற்றோர்  மகனின் உயிரை காப்பாற்ற அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு வெளி நோயாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டு  OP No :200096180000637005. சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20.12.3018, 24.12.2018 மற்றும் 14.01.2018 ஆகிய நாட்களில் வந்து ஊசி போட வேண்டும் என துண்டு சீட்டில் எழுதி கொடுத்துள்ளனர்.

தற்பொழுது அரை இறுதி தேர்வு நடை பெற்று வரும் நிலையில் நாய்கடியால் பாதிக்கப்பட்ட மாணவன் மிகுந்த மன துயரத்தில் உள்ளான்.
நாய் கடிக்கும் போது ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தேன் இல்லை என்றால் சதையை கடித்து எடுத்திருக்கும் என கண்ணீர் மல்க கூறினான்.  எனது உயிருக்கு ஏதேனும் ஆபாத்தா அண்ணா என நம்மிடம் கேட்டான்.
ஒரு கணம் திகைத்து போய் விட்டோம்.
தம்பி எதுவும் ஆகாது ..
தொடர்ந்து மருத்துவமனை சென்று ஊசி போட்டு பத்தியம் இரு தம்பி என ஆறுதல் கூறினோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவனின் பாட்டியையும் இதே நாய் கடித்து குதறியதாக மேலும் அதிர்ச்சியான செய்தியையும் நம்மிடம் கூறினார்கள்.

இது போல் தெருநாய் / வெறிநாய் கடியினால் பலர்  பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.

கோரிக்கை :

1. தெரு நாய் / வெறி நாய்களினால் திருப்பூர் மாநகர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு சார்பாக மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு புகார் மனு  ,11,2018 அன்று அனுப்பப்பட்டது.
ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை.

2.திருப்பூர் மாநகரம் முழுவதும் புற்றீசல் போல் மாநகராட்சி உரிமம் பெறாமல் விதிமுறைகள் மீறப்பட்டு  சட்ட விரோதமாக  செயல் படும்  கோழிக்கடைகள்,

கோழி விற்பனை செய்யும் கடைகளில் எந்த பாதுகாப்பு வசதிகளும் கிடையாது.
கோழி கழிவுகளினால் துர்நாற்றம்.
ஈக்கள் பெருமளவில் காணப்படுவதினால் பொது சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

மாமிசம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் சுகாதார சான்றுகள் பெற வில்லை.

ஆடு மாடு மீன் கோழி என மாமிசம் விற்பனை செய்யும் கடைகளின் முன் சுமார் பத்து தெரு நாய்கள் எப்போதும்  காணப்படுகிறது.

கடைகாரர்கள் தூக்கி வீசும் மாமிச கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள் சாலையில் செல்பவர்களை கடித்து குதறுகிறது.

மாநகராட்சி சுகாதார துறையினரும் உணவு பாதுகாப்பு துறையினரும் அனைத்து கடைகளையும் உரிய முறையில் ஆய்வு செய்து சட்ட விரோதமாக செயல் படும் மாமிச கடைகளையும்  மாநகராட்சி ஆடு வதை கூடங்களை பயன் படுத்தாத கடைகளையும் தடை செய்யக்கோருகிறோம்

3.மாமிச கழிவுகளை நல்லாற்றிலும் மாநகராட்சியால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் இரவு நேரங்களில் கொட்டுகிறார்கள் .
துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்தி வருகிறார்கள்.வர்த்தகர்களிடமிருந்து தினமும் சேகரமாகும் மாமிச கழிவுகளை மாநகராட்சி சுகாதாரதுறையினர் அப்புறப்படுத்த கோருகிறோம்.

4.தெரு நாய் /வெறி நாய் கடிபட்டு இரத்தம் சொட்ட வந்த மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை செய்யாமல் கொஞ்சமும் கூட ஈவு இரக்கம் இல்லாமல் திருப்பி அனுப்பிய 4.வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார  நிலைய பெண் பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.

5.நாய்கடிக்கு போடப்படும் ஊசி மருந்து விலை உயர்வானதாம் .ஒரு நபருக்கு போட முடியாதாம்.
ஐந்து நபர்கள் ஒரே நேரத்தில் நாய்கடிப்பட்டு வந்தால் தான் போட முடியும் என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. 24 மணி நேரமும் நாய்கடிப்பட்டு வருபவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக சிகிச்சை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறை  உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

6..தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் தமிழக முதல்வரை தலைவராக கொண்டு செயல் படும் நிலையில் தெரு நாய்களின் நலன் கருதி அனைத்து தெரு நாய்களையும் அரசு செலவில் பாதுகாக்க கோருகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .....