Friday 21 September 2018

என்னங்க சார் உங்க சட்டம்?

பத்திரிக்கை செய்தி.
21.09.2018

லஞ்சம் ஊழலுக்கு எதிராக திருப்பூரில் இருந்து தலைநகர்  சென்னையை நோக்கி  பயணம்!

அன்புடன் அழைக்கின்றோம்.

என்னங்க சார் உங்க சட்டம்?

அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் 23 செப்டம்பர் 2018 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற இருக்கும் மாபெரும் மக்கள் சந்திப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு (LAACO)   சார்பாகவும் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு (FACT INDIA) சார்பாகவும்  சமூக அக்கறை உள்ள சமூக ஆர்வலர்கள் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் இருந்து 22.09.2018 இரவு 9.00 மணி அளவில் பறப்பட இருக்கிறோம்.

திருப்பூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஏன்?  எதற்காக இந்த மக்கள் சந்திப்பு?

லஞ்சம் ஊழலை  ஒழிப்பது யார்?

ஊழல்வாதிகள் எப்படி இவ்வளவு தைரியமாக ஊழல் செய்கிறார்கள்?

எவ்வளவு ஊழல் செய்தாலும் தண்டனையிலிருந்து எப்படியும் தப்பிவிடலாம் என்கிற தைரியம்.

இந்த தைரியத்திற்கு காரணம் என்ன?
வலுவில்லாத ஊழல் ஒழிப்புச் சட்டங்கள்.

ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மட்டும் வலுவாக இருந்திருந்தால் இந்நேரம் பலர் பதவியில் இல்லாமல் தண்டனையில் இருந்திருப்பர்.

ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்க வேண்டும்.

திட்டமிட்டு ஊழல் செய்பவர்களை அதை விட புத்திசாலித்தனமாக தகர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட சட்டங்களை நமது அரசுகள் இயற்ற வேண்டும்.

ஆனால் அதிர்ச்சி என்னவென்றால், நமது மத்திய மாநில அரசுகள், இருக்கும் சட்டங்களை இன்னும் பலவீனமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சட்டங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் எவ்வளவு கொடூரமானது என்றால் இந்த சட்டங்களை இனி நாம் ஊழல் ஒழிப்புச் சட்டங்கள் என்றே சொல்ல முடியாது.

ஊழல் வளர்ப்பு சட்டங்கள் அல்லது ஊழல்வாதிகள் பாதுகாப்பு சட்டங்கள் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு மோசமான திரிக்கப்பட்டிருக்கின்றன.

நமது நாடு சுதந்திரம் அடைந்த பின் இன்று வரையிலும் பல்வேறு வகையான பல இலட்சம் கோடி ஊழல் முறைகேடுகள் தினம் தினம் நடை பெற்று வருகிறது.

இதனை தடுக்க வேண்டிய மத்திய மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகங்களால் எந்த ஊழலையும் கண்காணித்து தடுக்க முடிய வில்லையே ஏன்?

லஞ்ச ஒழிப்பு அமைப்புகளை ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாத  அனைத்து அதிகாரங்களும் கொண்ட தன்னாட்சி அமைப்பாக மாற்ற வேண்டும்.

நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்காத நாமும் இதற்கு முழு காரணம்.

இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடம் , ஏன் ஊடகங்களிடமுமே கூட மிக குறைவாக இருக்கிறது.

அறப்போர் இயக்கம், இதைப்பற்றிய விழிப்புணர்வுக்காக வரும் செப்டம்பர் 23 அன்று சென்னையில் 'என்னங்க சார் உங்க சட்டம்'? என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள்  பொது மக்கள் சந்திப்பு நிகழ்த்த உள்ளது.

ஊழல் ஒழிப்பை மக்களைத் தவிர வேறு யாரும் உண்மையாக முன்னெடுக்க முடியாது.

நாம் இல்லை என்றால் வேறு யார்?

இப்போது இல்லை என்றால் வேறு எப்போது?

லஞ்சம் ஊழலுக்கு எதிராக ஒன்று கூடுவோம் வாருங்கள்.

Wednesday 12 September 2018

பொது இடத்தில் காவலூழியர் புகை பிடிக்கலாமா?

காவல் துறை எச்சரிக்கை!
பொது இடத்தில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம்!

இது காவலூழியர்களுக்கு விதி விலக்கா?

பொதுமக்கள் கூடும் இடங்களில் புகை பிடிக்கக்கூடாது.  அதனை மீறி புகைப்பிடித்தால் காவல் துறையினரால்
அபராதம் விதிக்கப்படும் .

திருப்பூரில் பெரும்பாலான பேக்கரிகளில் இவ்வாறான எச்சரிக்கை பலகை காணப்படுகிறது.

ஆனால் அவர்களே சிகரெட் பீடி விற்பனை செய்து வருகின்றனர்!

ஒரு கையில் டீ குடித்து கொண்டும்  மறு கையில் புகை பிடித்து கொண்டும் பல பேர்களை காண முடியும்.

இவர்கள் மற்றவர்களை பற்றி எந்த வித கவலையும் படமாட்டார்கள்

ஆனால் இதனை தடுக்க. வேண்டிய நம்ம காவலூழியரான ஏட்டய்யா ஒருவர் திருப்பூர் போயம்பாளையம் சிக்னல் அருகே உள்ள பேக்கரியில் டீ குடித்து கொண்டு புகையும் பிடிக்கிறார்!

இவர்களுக்கு மட்டும் விதி விலக்கா என்ன?

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்.

Tuesday 11 September 2018

பள்ளி தாளாளருக்கு பிணையில் விடக்கூடாத பிடீயாணை!

NON BAILABLE WARRANT!
பிணையில் விடக்கூடாத பிடியாணை!

திருப்பூர் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா நர்சரி & பிரைமரிப்பள்ளி தாளாளருக்கு பிணையில் விடக்கூடாத பிடியாணை -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தில் கல்வி பயில உயர்நீதிமன்றத்தினை நாடி செல்லும் அவல நிலை திருப்பூரில் தொடர்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டண கொள்ளை நடை பெற்று வருவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சட்ட விரோதமாக கூடுதல் கல்விக்கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஒரு சில  தனியார் பள்ளிகள் குறித்து பாதிக்கப்பட்ட  பெற்றோர் ஆதாரங்களுடன்  சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பில் புகார் அளித்து உதவியை நாடி உள்ளனர்.

1.ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

2.ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

3.கொங்கு வேளாளர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

4.APS அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

5.AVP டிரஸ்ட் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

6.ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா நர்சரி & பிரைமரிப்பள்ளி

திருப்பூர் அனுப்பர்பாளையம் கவிதா லட்சுமி நகரில் செயல் பட்டு வரும் ஸ்ரீ விக்னேஷ்வரா வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளியில்  இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் இரு பெண் குழந்தைகளிடம் முதன்மைக்கல்வி அலுவலரின் உத்தரவுடன் கூடுதல் கட்டணம் வசூல்!

கூடுதல் கட்டணம் செலுத்த மறுத்ததால் இரு குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை!

திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்.

எனவே
1. பள்ளி தாளாளர்
2.திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலர் 3.திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
4.தொடக்கப்பள்ளிகள்  இயக்குநர்
5. அனைவருக்கும் கல்வி  இயக்கக திட்ட இயக்குநர் (SSA )
6.செயலாளர் பள்ளிகல்வி துறை

பாதிக்கப்பட்ட பெற்றோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபேராணை வழக்கு பதிவு செய்யப்பட்டது .

முதன்மைக்கல்வி அலுவலர் நேரில் ஆஜர்.

பள்ளி தாளாளர் ஆஜராக மறுப்பு!

பிணையில் விடக்கூடாத பிடியாணை பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த திருப்பூர் மாநகர காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.

காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான்.

குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க உத்தரவு.

கமிட்டி அமைத்து விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் வழங்க உத்தரவு!

குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்காமலும் காலாண்டு தேர்வு வினாத்தாள் வழங்காமலும் சின்னஞ்சிறு குழந்தைகளை பழி வாங்கி வருகிறான்.

தர்மம் வெல்லும்.!
அதர்மம் தோற்கும்!!
காத்திருக்கிறோம்.

Sunday 2 September 2018

பத்திரிக்கை செய்தி!

02.09.2018

பத்திரிக்கை செய்தி .

திருப்பூர் பிருந்தாவன் ஹோட்டலில் என்னங்க சார் உங்கள் சட்டம்?  என்ற தலைப்பில் அறப்போர் இயக்கம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் அறப்போர் இயக்கத்தின் நிர்வாகிகள் ஜெயராம் ,அக்தர், பிரகாஷ் கௌதம், சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நிறுவனர் நாஞ்சில் கோ.கிருஷ்ணன், மாநில அமைப்பு செயலாளர் ஆ.பழனிக்குமார், மாநில இணை செயலாளர் அசோக்குமார் கோவை மண்டல செயலாளர் சிவக்குமார், திருப்பூர் மாவட்ட செயலாளர் அம்ஜத்கான் ,திருப்பூர் வடக்கு வட்ட அமைப்பாளர் முத்துகுமார்
மற்றும்
சமூக ஆர்வலர்கள் பிரபாகரன், சுந்தர பாண்டியன், சரவண பிரகாஷ், ராஜேந்திரன், சரவணன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியன் ,செந்தில் குமார், அன்பழகன், காதர் பாட்ஷா மற்றும் பலர்
கலந்து கொண்டனர் .

லஞ்சம் வாங்குபவர்கள் ஊழல் செய்யும் அரசூழியர்கள், அரசியல்  வாதிகளை தண்டிக்கும் சட்டங்கள் ஆட்சியாளர்களால் மிகவும் பலவீன படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தறுதலை சட்டமாக மாற்றப்பட்டு மனுதாரர்கள் கோமாளியாக்கபப்பட்டு வருகின்றனர்.

மாநில ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை எந்த ஊழலையும் கண்காணித்து ஊழலை ஒழிக்கவும் தடுக்கவும்  முன்வர வில்லை. அவர்களை செயல் பட விடாமல் மத்திய மாநில அரசுகள் அவர்கள் கட்டுப்பாட்டில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர் .

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற. சொல் ஏட்டளவிலே உள்ளது.
இதனால் இந்திய அரசியலமைப்பு சாசனம் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.

நேர்மையாக செயல் பட்டு வரும்  ஒரு சில அரசூழியர்கள்  ஆட்சியாளர்களால் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர்.

மக்களாட்சி நடக்கும் நம் நாட்டில் அநீதிக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு போட்டு அவர்களின் குரல் வலையை நசிக்கி வருகின்றனர்.

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டு  சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து சட்டத்தினை வலிமை அடைய செய்ய வேண்டும்.

இதனை மக்களே செய்ய வேண்டும்.
மக்களால் மக்களுக்கான சட்ட முன்வடிவினை தயாரித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டத்தின் மூலம் உரிய பாதுகாப்பு ஏற்படுத்திடவும்
சிதறி கிடக்கும் சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது கடமைகளையும் உரிமைகளையும்  மீட்டெடுத்திட   செப்டம்பர் 23 ஆம் தேதி சென்னையில் அறப்போர் இயக்கம் சார்பில் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடை பெற உள்ளது.
அது சமயம் அனைத்து பகுதிகளில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள
வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.

திருப்பூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டது .