Sunday 18 November 2018

தெருநாய்களிடம் இருந்து திருப்பூர் மக்களை பாதுகாக்கக்கோரி பொதுநல புகார் மனு :

தெரு நாய்/வெறி நாய்களிடம் இருந்து திருப்பூர் மாநகர மக்களை பாதுகாக்கக்கோரி அவசர பொது நல புகார் மனு .

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர் 
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு 
363, காந்தி ரோடு 
பெரியார் காலனி 
திருப்பூர் -641 652 

பெறுநர் : 
ஆணையர் அவர்கள் 
மாநகராட்சி அலுவலகம் 
திருப்பூர் 

கடிதம் எண் :LAACO / C L /0005/TPR /2018 ; நாள் ; 19.11.2018 

அய்யா,

பொருள் ; திருப்பூர் மாநகரம் முழுவதும் சுற்றித்திரியும் தெருநாய் /வெறி நாய்களிடம் இருந்து பொது மக்களை பாதுகாக்கக்கோரி குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ் அவசர பொது நல புகார் மனு, 

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் மாநகராட்சியின் 60 வார்டுகளிலும்  கடந்த இரண்டு ஆண்டுகளில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து கொண்டு உள்ளது.

வீதிக்கு  20 தெரு நாய்கள் வீதம் கணக்கிட்டால்  தோராயமாக ஒரு  வார்டுக்கு ஐந்தாயிரம்× அறுபது வார்டுகள் ( 5000 ×60 = 3,00000 ) சுமார் மூன்று இலட்சம் தெரு நாய்கள் இருப்பதினை காண முடிகிறது.

மட்டன், சிக்கன், மீன் என மாமிசம்  விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு கடைகளின் முன்பும் சுமார் 10 தெரு நாய்கள் காணப்படுகிறது.

நல்லாறு மற்றும் நொய்யல் ஆற்றிற்கு உள்ளும் கரைகளிலும் பல ஆயிரகணக்கான நாய்கள் உள்ளன.

பச்சை மாமிச கழிவுகளை உண்ணும் பல நாய்கள் இரத்த வெறி பிடித்து அலைகிறது.

பல பகுதிகளில் சொறி பிடித்து நோய்வாய் பட்டு பல நாய்கள் உயிருக்கு போராடி கொண்டும் இருப்பதினை காண முடிகிறது.

இதனால் நோய் தொற்று மற்றும் பொது சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

ஒரு பெண் நாய் இருக்கும் பகுதியில் சுமார் பத்து ஆண் நாய்களை காண முடிகிறது.

நாய்கள் ஒன்றுக்கு ஒன்று ஆவேசமாக சண்டை இட்டு கொள்கிறது.

பல நாய்கள் பிரதான சாலைகளிலும் வீதிகளின் நடுவிலும் எங்கு நோக்கினாலும் படுத்து தூங்கி கொண்டிருக்கிறது.
இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறும் விபத்துகளும்  தினமும் ஏற்பட்டு வருகிறது.

பல நாய்கள் வாகனங்களில் சிக்கி பரிதாபமாக இறந்து  போகின்றன.

இரவு நேரங்களில் நாய்கள் சண்டை இடுவதும் ஊளை இடுவதும்  குரைக்கும் சத்தத்தினால்  மக்கள் நிம்மதியாக தூங்க முடிவதில்லை.

பின்னலாடை தொழிற்சாலைகள் நள்ளிரவு வரை இயங்குவதினால் அங்கு பணி புரியும் தொழிலாளர்கள் நள்ளிரவு நேரத்தில் வீதிகளில் நடந்தோ இருச்சக்கர வாகனங்களிலோ வீடுகளுக்கு  செல்லும் போது வீதிகளில் ஆங்காங்கே இருக்கும் பல நாய்கள் ஒன்று சேர்ந்து குரைப்பதும் ஆவேசமாக பாய்ந்து துரத்துவதும் கடித்து குதறுவதும் தினமும் நடை பெற்று வருகிறது.

நாய்கள் துரத்துவதினால் பலர் இருச்சக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்து அடிக்கடி விபத்துக்களும்  ஏற்படுகிறது.  

இரவு நேரங்களில் வீதிகள் தோறும்  எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே படுத்திருப்பதையும்  சண்டை இடுவதினையும் காண முடிகிறது.

இரவு நேரங்களில் மக்கள் மிகுந்த பதட்டத்துடனும் அச்சத்துடனும்  உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் சாலைகளிலும் வீதிகளிலும் கடந்து  செல்லும் நிலை உள்ளது.

சாலைகளில் செல்லும் பாதசாரிகளுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் தெரு நாய்களினால் மிகுந்த ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

மொத்தத்தில் திருப்பூர் மாநகர மக்களுக்கு தெரு நாய்களிடம் இருந்து பாதுகாப்பு இல்லா நிலை காணப்படுகிறது. 

செல்லப்பிராணி என நாய்களை  வீடுகளில் வைத்து  வளர்ப்பவர்களும்  நாய்களை வீதிகளில் விட்டு விடுகின்றனர்.

அந்த நாய்களும் தெருவில் போவோரை துரத்துவதும் கடிப்பதுமாக உள்ளது. 

இதனை நாயின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதில்லை .

மனித உயிருக்கு தீங்கு ஏற்படுத்தும் நாய்கள்  குறித்து கவனமில்லாமல் இருப்பவர்களுக்கு இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு -289 இன் கீழ் ஆறு மாதம் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் உண்டு.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் நாய் கடிக்க வந்தது அல்லது கடித்து விட்டது என காவல் நிலையத்தில் புகார் அளித்தால் நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. மாறாக எச்சரித்து அனுப்பி விடுகின்றனர்.

இரவு நேரங்களில் பாதுகாப்புக்காக சைக்கிளில் ரோந்து வரும் கூர்க்காக்களையும் தெரு நாய்கள் விட்டு வைப்பதில்லை. 

தினமும் தெரு நாய்கள் கடித்து சிகிச்சை பெறுபவர்கள் விபரங்களை அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தனியார் மருத்துவமனைகளிலும் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தெரு நாய் கடி பட்டு  சிகிச்சை பெற 4, வேலம்பாளையம்  ஆரம்ப  சுகாதார நிலையம்  செல்பவர்களுக்கு டி.டி எனப்படும்  செப்டிக் ஊசி மட்டும் உடனடியாக போட்டு அனுப்பி விடுகிறார்கள்.

நாய்கடிக்கு செலுத்தும் ஊசி மருந்து ஒரு நபருக்கு போட முடியாதாம். ஐந்து  நபர்களுக்கு தான் போட வேண்டுமாம்.

ஐந்து நபர்கள் ஒரே நேரத்தில் நாய்கடி பட்டு வந்தால் மட்டுமே அந்த ஊசி மருந்தை போடுவார்களாம். 

நாய் கடிக்கு போடும் ஊசி மருந்திலும் ஊழல் முறைகேடுகள் நடை பெற்று வருகிறது.

மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் எப்போதாவது ஒரு முறை தான் நாய்களை பிடித்து செல்கிறார்கள்.

அந்த நாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்து மீண்டும் எங்கு இருந்து பிடித்து சென்றார்களோ அங்கு கொண்டு வந்து விட்டு செல்கின்றனர்.

அனைத்து தெரு நாய்களுக்கும் குடும்பக்கட்டுபாடு செய்து விட்டதாக கூறுகின்றனர்.

அப்படியானால் நாய்களின் இனப்பெருக்கம் எப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில்  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது என்பதற்கு தாங்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.

மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட  தெரு நாய்கள் இருப்பதாக நாம் சொல்லும் குற்றச்சாட்டினை தாங்கள் மறுக்கலாம்.

அதனை நிருபிக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.

கோரிக்கை :

சுகாதார ஆய்வாளர்கள் சுகாதார அலுவலர்கள் சுகாதார பணியாளர்களை இரவு நேரங்களில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும்  சென்று முழுமையாக ஆய்வு செய்ய சொல்லுங்கள். அப்போது தான் நமது குற்றச்சாட்டு குறித்த உண்மை நிலை தங்களுக்கு தெரிய வரும்.

வெறி நாய்களை கட்டுப்படுத்தவும் நோய்வாய் பட்டுள்ள அனைத்து தெரு நாய்களுக்கும்  உரிய சிகிச்சை அளித்து மற்ற நாய்களுக்கும் நோய் பரவாமலும்  பொது சுகாதாரக்கேடு ஏற்படாமல் தடுக்கக் கோருகிறோம்.

அனைத்து ஆண் பெண் தெரு நாய்களையும் கண்டறிந்து குடும்பக்கட்டுப்பாடு செய்து நாய்களின் இனப்பெருக்கத்தினை உடனடியாக தடுக்கக்கோருகிறோம்.

திருப்பூர் மாநகராட்சி சிறந்த மாநகராட்சி என விருது பெற்ற போதிலும் இது போன்ற சுகாதார சீர்கேடுகள் தொடர்வது வேதனை அளிக்கிறது.

தெரு நாய் /வெறி நாய்களிடம் இருந்து திருப்பூர் மாநகர மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக்கோரி  இந்த அவசர பொது நல புகார் மனு குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(4) இன் கீழ்  தங்கள் பார்வைக்கு அனுப்புகிறோம்.

நாள் : 19.11.2018
இடம் : திருப்பூர்

மனுதாரர்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

No comments:

Post a Comment