Sunday 29 October 2017

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் 30.10.2017 முதல் 04.11.2017 வரை!!

திருப்பூர்  மாவட்ட செயல்துறை நடுவராகிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள் !!

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் மூலம் 30.10.2017 முதல் 04.11.2017 வரை நடைபெற இருக்கும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடை பிடிக்க படுவதற்கு முன் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலகங்களில்  கடைபிடிக்கப்படும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரங்கள் போலியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசூழியர்கள் எடுக்கும் உறுதி மொழிகளும் பொய்யாகி போகின்றது.

ஒவ்வொரு அரசூழியர்களும் தேசப்பற்றுடன் லஞ்சம் வாங்க மாட்டேன்!  ஊழல் செய்ய மாட்டேன் என நேர்மையான முறையில் உறுதி மொழி எடுத்து அதனை கடைபிடித்து வந்தால் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் நடத்தும் நிலை ஏற்படாது.

வேண்டுகோள்கள் :

1. லஞ்சம் வாங்குவதும் குற்றம்!
லஞ்சம் கொடுப்பதும் குற்றம்!
என்ற அரசாணையின் படி    மாவட்டத்தின் 90 % அரசுத்துறை  அலுவலகங்களில் தகவல் பலகை வைக்கப்பட வில்லை.

எனவே தாங்கள்  அனைத்து அரசுத்துறை அலுவகங்களிலும் தகவல் பலகைகள் வைக்க அவசர நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுகிறோம்.

2. அரசூழியர்கள் அலுவலக நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிந்து தான் பணிபுரிய  வேண்டும் என்ற அரசாணை படி மாவட்டத்தின் 99 % அலுவலகங்களில் கடை பிடிப்பதில்லை.

எனவே தாங்கள் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் அடையாள அட்டையினை அணிந்து தான் பணியாற்ற வேண்டும் என்ற உத்தரவினை அமல் படுத்த வேண்டுகிறோம்.

3. பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது அரசாணை ; 99 ல்  குறிப்பிட்டுள்ள 30 தினங்கள் கால அளவிற்குள்ளும்  மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள கால அளவிற்குள்ளும் அவர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற உத்தரவிட வேண்டுகிறோம்.

4. தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுக்களின் மீது உரிய கால அளவிற்குள் பொது தகவல் அலுவலர்கள் பதில் வழங்காமல் முதல் மேல்முறையீடு செய்யப்பட்டால்  கடமை தவறிய பொதுதகவல் அலுவலர்கள் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

5.பல அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ள காரணத்தினால் பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள், செக்சன் ரைட்டர்கள், இடைத்தரகர்கள்,  போன்றவர்களை நியமித்துள்ளனர்.  இவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக
இவர்கள் மூலமாகத்தான் பொதுமக்களிடம் இருந்து லஞ்சப்பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கயவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்.

இவ்வாறான அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை  உடனடியாக நிரப்ப வேண்டுகிறோம்.

6. எடையாளர்கள் நியமிக்கப்படாத நியாய விலைக்கடைகளில்  விற்பனையாளர்களே அதிகாரிகளின் துணையுடன் எடையாளர்களை நியமித்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு ஊதியம் வழங்க வெளி மார்க்கெட்டில் பொருட்களை திருடி விற்கின்றனர்.

இவர்களை கண்டறிந்து  தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

7. அரசின் நிதி உதவிகளையும் சலுகைகளையும் பெற தகுதியில்லாத பயனாளிகளுக்கு பொய்யான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் அரசுக்கு பல. லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

முழுமையான விசாரணை செய்யாமல் லஞ்ச பணத்திற்கு ஆசைப்பட்டு போலியான சான்றிதழ்கள் வழங்கும் கடமை தவறிய கிராம நிர்வாக அலுவலர்கள். வருவாய் ஆய்வாளர்கள்,வட்டாட்சியர்களை கண்காணித்து  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

8. சட்ட விரோதமாக செயல் படும்  தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து கணிசமான தொகையினை லஞ்சமாக பெற்றுக்கொண்டு பொய்யான சான்றிதழ்கள் வழங்கி வரும்  ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சி  அதிகாரிகள். சுகாதார அலுவலர்கள், தீயணைப்பு  மற்றும் மீட்புப்பணித்துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள், மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் மீது துறைரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

9. அரசு விதிமுறைகள் படி எந்த ஒரு கட்டிடமும் கட்டப்படுவது இல்லை .
பல லட்சக்கணக்கான பணத்தினை லஞ்சமாக பெற்று கொண்டு சட்ட விரோதமமாக  அனுமதி அளிக்கின்றனர்.

இதற்கு மாநகராட்சி பொறியாளர்கள். வரி வசூலர்கள். கட்டிட வரைபடம் தயாரித்து வழங்கும் பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

10. வருவாய் அதிகம் ஈட்டி தரும் பத்திர பதிவுத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் போன்ற அனைத்து அரசுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களை கண்டறிந்து உடனடியாக வெளியேற்ற வேண்டுகிறோம்.

நாஞ்சில் கோ. கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

No comments:

Post a Comment